ADDED : அக் 19, 2024 11:01 PM
பெங்களூரு: போக்குவரத்துத் துறையின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், தனியார் பஸ் நிறுவனங்கள் மனம் போனபடி, கட்டணம் வசூலிக்கின்றன. தீபாவளி நெருங்கும் வேளையில் மூன்று மடங்கு அதிக கட்டணம் நிர்ணயித்துள்ளன.
பண்டிகை நேரத்தில் மனம் போனபடி, கட்டணத்தை அதிகரித்து, பயணியரிடம் கொள்ளை அடிப்பதை, தனியார் பஸ் நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளன. விநாயகர் சதுர்த்தி, தசரா பண்டிகை நாட்களில், மூன்று மடங்கு, நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலித்தன.
தீபாவளி நெருங்குவதால், பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலரும் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.
சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, தனியார் பஸ் நிறுவனங்கள், மனம் போனபடி கட்டணம் வசூலிக்கின்றன. அதிக கட்டணம் வசூலித்தால், கடுமையான நடவடிக்கை எடுப்பதாக, போக்குவரத்துத் துறை எச்சரித்தும் பயனில்லை.
போக்குவரத்துத் துறை எச்சரிக்கிறதே தவிர, கடுமையான நடவடிக்கை எடுப்பது இல்லை. பெயரளவில் சில பஸ்களை சோதனை நடத்தி அபராதம் விதித்துவிட்டு, அதிகாரிகள் மவுனமாகின்றனர்.
எனவே தனியார் பஸ் நிறுவனங்கள், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவில்லை. ஒவ்வொரு பண்டிகையின் போதும், பயணியரிடம் கொள்ளை அடிக்கின்றனர்.
அக்டோபர் 31 தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவம்பர் 1ம் தேதி கன்னட ராஜோத்சவா விடுமுறை.
இதனால் வியாழன் முதல் சனிக்கிழமை வரை விடுமுறை இருக்கும். ஞாயிறும் சேர்ந்தால் நான்கு நாட்கள் விடுமுறை வரும்.
பெங்களூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பலரும் திட்டமிடுகின்றனர். இது தனியார் பஸ் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.