கேரளாவில் தனியார் பஸ் ஸ்டிரைக்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கேரளாவில் தனியார் பஸ் ஸ்டிரைக்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜூலை 08, 2025 09:51 PM

பாலக்காடு; கேரளாவில், தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அழைப்பை ஏற்று, மாநிலம் தழுவிய பஸ் ஸ்டிரைக்கால், பாலக்காட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
கேரள மாநிலத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பஸ்களில் சலுகை கட்டணமாக 2 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த பஸ் கட்டண சலுகையை, 5 ரூபாயாக உயர்த்த வேண்டும். தகுதியானவர்களுக்கு மட்டுமே சலுகை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று மாநிலம் தழுவிய ஸ்டிரைக் நடந்தது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பள்ளி, -கல்லூரி மாணவர்களும், தொழிலாளிகளும் அவதிப்பட்டனர்.
அரசு பஸ்கள் இயங்கினாலும், ஸ்டிரைக் காரணமாக தனியார் பஸ்கள் இயங்காததால், கிராமப்புற மக்கள் பாதித்தனர். வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் சார்பில், பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது.