UPDATED : டிச 19, 2024 03:47 AM
ADDED : டிச 19, 2024 01:44 AM

நொய்டா, உத்தர பிரதேசத்தின் நொய்டாவில், 'ப்ளே ஸ்கூல்' ஒன்றில், ஆசிரியைகள் கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்து, மொபைல் போன் மற்றும் லேப்டாப் வழியாக பார்த்து வந்த பள்ளி இயக்குனரை, போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யின் நொய்டாவில் உள்ள செக்டார் 70ல், 'லேர்ன் வித் பன்' என்ற, மழலையருக்கான தனியார் ப்ளே ஸ்கூல் இயங்கி வந்தது. இப்பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியை ஒருவர் கழிப்பறைக்கு சென்ற போது, அங்குள்ள பல்ப் ஒன்றில் வித்தியாசமான பொருள் இருப்பதை பார்த்தார்.
கூர்ந்து கவனித்ததில், அதில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்ததை அவர் கண்டுபிடித்தார். இது தொடர்பாக, பள்ளி காவலாளி வினோத்திடம் அவர் தெரியப்படுத்தினார். இது குறித்து, பள்ளி இயக்குனர் நவ்னீஷ் சஹாய், ஒருங்கிணைப்பாளர் நரூல் ஆகியோரிடமும் புகாரளித்தார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதில் சந்தேகமடைந்த ஆசிரியை, அப்பகுதி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், கழிப்பறையில் ரகசிய கேமராவை பொருத்தியது நவ்னீஷ் சஹாய் என தெரிய வந்தது.
ஆன்லைனில் 22,000 ரூபாய்க்கு கேமராவை வாங்கி, அதை கழிப்பறையில் உள்ள பல்பில் பொருத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பதிவு செய்யும் வசதி இல்லாத இந்த கேமரா வாயிலாக, ஆசிரியைகளை தன் மொபைல் போன் மற்றும் லேப்டாப் வாயிலாக பார்த்து வந்ததை சஹாய் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், காவலாளி வினோத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதால், அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல், ஏற்கனவே ஒருமுறை கழிப்பறையில் ரகசிய கேமரா வைத்தது கண்டுபிடிக்கப்பட்டு புகாரளித்தும், நிர்வாகிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தப் பள்ளி ஆசிரியைகள் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருவதால், பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.