காட்டுக்கு சென்ற தசரா யானைகளுக்கு பிரியா விடை; அடம் பிடித்த ஏகலைவனால் நெகிழ்ச்சி
காட்டுக்கு சென்ற தசரா யானைகளுக்கு பிரியா விடை; அடம் பிடித்த ஏகலைவனால் நெகிழ்ச்சி
ADDED : அக் 15, 2024 12:22 AM

மைசூரு : தசரா விழாவில் பங்கேற்ற 14 யானைகள், அவை அழைத்து வரப்பட்ட முகாம்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு, நேற்று விடப்பட்டன. ஏகலைவன் யானை செல்ல மாட்டேன் என அடம் பிடித்ததால், வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
மைசூரு தசரா விழாவின் பிரதான நிகழ்வு ஜம்பு சவாரி ஊர்வலம். அதிலும் யானைகள் வீர நடை போட்டு, ஊர்வலத்தில் பங்கேற்கும் காட்சி, நம் மனதை கொள்ளை கொள்ளும்.
இந்த வகையில், தசரா விழாவிற்காக, நாகரஹொலே, பண்டிப்பூர், மத்திக்கோடு, துபாரே ஆகிய முகாம்களில் இருந்து, 14 யானைகள் மைசூரு நகருக்கு ஆகஸ்ட் 21, செப்., 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக அழைத்து வரப்பட்டன.
அரண்மனை வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்க வைக்கப்பட்டன. யானைகளின் பாகன், பராமரிப்பாளர் குடும்பத்தினரும் இங்கேயே தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. அக்., 3ம் தேதி துவங்கிய தசரா விழா, 12ம் தேதி ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இதையடுத்து, யானைகளை அவை இருந்த முகாம்களுக்கு அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டது. அரண்மனை வளாகத்தில் நேற்று மைசூரு மண்டல வனப்பாதுகாப்பு அதிகாரி மாலதி பிரியா, மாவட்ட துணை வனப் பாதுகாப்பு அதிகாரி பிரபாகர் உட்பட உயர் அதிகாரிகள், யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். வாழைப்பழம், வெல்லம், கரும்பு ஊட்டி மகிழ்ந்தனர்.
மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, பாகன், பராமரிப்பாளர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தலா 10,000 ரூபாய் சிறப்பு கவுரவ நிதி வழங்கினார். பின், லாரிகளில் ஒவ்வொரு யானையாக ஏற்றப்பட்டது.
அப்போது, ஏகலைவன் யானை மட்டுமே லாரியில் ஏற மறுத்தது. நீண்ட நேரம் போராடி லாரியில் ஒரு வழியாக ஏற்றப்பட்டது. இதை பார்த்த அதிகாரிகள் மிகவும் நெகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.
பின், 14 யானைகளும் அந்தந்த முகாம்களுக்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டு, விடப்பட்டன. பாகன், பராமரிப்பாளர் குடும்பத்தினரும் உடன் சென்றனர்.

