ADDED : அக் 24, 2024 01:03 AM

வயநாடு, வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடந்த மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி என, இரு தொகுதிகளில், காங்., மூத்த தலைவர் ராகுல் போட்டியிட்டு வென்றார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு தொகுதியை மட்டுமே தக்க வைக்க முடியும் என்பதால், வயநாடு தொகுதியின் எம்.பி., பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். அப்போதே இந்த தொகுதியில் தன் சகோதரி பிரியங்கா போட்டியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இடைத்தேர்தல்
வயநாடு லோக்சபா தொகுதி உட்பட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு, நவம்பர் 13ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
வயநாடு தொகுதியில் காங்., சார்பில், அக்கட்சி பார்லிமென்ட் குழு தலைவர் சோனியாவின் மகளும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் சகோதரியுமான பிரியங்கா போட்டியிடுவார் என, அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
இவரை எதிர்த்து, இடது ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொகேரி, பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், வயநாடு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட, கல்பெட்டாவில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு, நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ, காங்., வேட்பாளர் பிரியங்கா நேற்று வந்தார்.
இந்த பிரமாண்ட வாகன பேரணியில், ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, வயநாடு கலெக்டர் மேகஸ்ரீயிடம் பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.
புது அனுபவம்
முன்னதாக, கல்பெட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா பேசியதாவது:
கடந்த 35 ஆண்டுகளாக, பல்வேறு தேர்தல்களில் கட்சி நிர்வாகிகளுக்கு பிரசாரம் செய்துள்ளேன். 1989-ல், 17 வயதில் என் தந்தைக்காக பிரசாரம் செய்தேன். என் தாய், சகோதரர் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்காக பல தேர்தல்களில் பிரசாரம் செய்துள்ளேன்.
தற்போது எனக்காக முதன்முறையாக பிரசாரம் செய்கிறேன். இது, எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. வயநாடு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவதை கவுரவமாகக் கருதுகிறேன்.
உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள். சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக காங்., போராடி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நாட்டிலேயே இரு எம்.பி.,க்களை கொண்ட தொகுதியாக வயநாடு இருக்கப் போகிறது. நான் எம்.பி.,யாக இல்லாவிட்டாலும், வயநாடு மக்களின் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். என்னை வெற்றி பெறச் செய்தது போல், என் சகோதரி பிரியங்காவையும் வெற்றி பெறச் செய்யுங்கள்.
- ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,