ADDED : நவ 17, 2024 11:09 PM

பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது ஒயிட்பீல்டு -- செல்லகட்டா; மாதவாரா- - சில்க் இன்ஸ்டிடியூட் இடையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பெங்களூரு நகரில் வசிப்பவர்களுக்கு மெட்ரோ ரயிலில் பயணம் செய்வது என்பது சர்வ சாதாரணமாக இருக்கலாம். ஆனால் கிராம பகுதிகளில் இருந்து வருவோர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது குதுாகலித்து போகின்றனர்.
மெட்ரோ ரயில் பாதை செல்லும் வழியில் உள்ள வீடுகளில் வசிப்போர், மாலை நேரம் குழந்தைகளுடன் மாடிக்கு சென்று மெட்ரோ ரயில் செல்வதை குழந்தைகளுக்கு காட்டி நேரத்தை போக்குகின்றனர். குழந்தைகளும் மெட்ரோ ரயிலை பார்த்து 'டாட்டா' காண்பிக்கின்றனர்.
பெங்களூரில் முதல் முதலில் 2011ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. எம்.ஜி., ரோட்டில் இருந்து பையப்பனஹள்ளி வரை ரயில் சென்றது. முதல் மெட்ரோ ரயிலை இயக்கியவர் பிரியங்கா. இவர் பெரிய குடும்பத்தில் பிறந்து, பெரிய கல்லுாரியில் படித்து வந்தவர் இல்லை.
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். பெங்களூரில் இருந்து கனகபுரா செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அந்த கிராமத்தில் முதல் டிப்ளமோ இன்ஜினியர் இவர் தான்.
மெட்ரோ ரயிலை இயக்கும்போது பிரியங்காவுக்கு வயது வெறும் 21. வேத் விக்னன் மகா வித்யா பீத் பள்ளியில் படித்த இவர், இன்ஜினியரிங் படிப்பிற்காக ஏ.பி.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் சேர்ந்தார்.
கிராமப் பகுதியில் இருந்து வந்தவர் என்பதால் முதலில் ஆங்கில பாடம் அவருக்கு சிரமமாக இருந்தது. ஆனாலும் பேராசிரியர்கள் அவரை ஊக்குவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை நான்கு ஆங்கில இலக்கண புத்தகங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
குறுகிய காலத்தில் ஆங்கில மொழி மீது அவருக்கு பற்று ஏற்பட்டது. படிப்பை முடிக்கும் போது கல்லுாரியின் டாப்பர்களில் ஒருவராக இருந்தார். தற்போது மெட்ரோவில் தொழில்நுட்ப பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது வாழ்க்கை பலருக்கு உத்வேகமாக உள்ளது.
-- நமது நிருபர் - -