பாலஸ்தீன பையுடன் பிரியங்கா; பா.ஜ., தலைவர்கள் கடும் தாக்கு
பாலஸ்தீன பையுடன் பிரியங்கா; பா.ஜ., தலைவர்கள் கடும் தாக்கு
ADDED : டிச 17, 2024 02:25 AM

புதுடில்லி : பாலஸ்தீன ஆதரவு பையுடன் பார்லிமென்டுக்கு வந்த காங்கிரஸ் எம்.பி., பிரியங்காவின் நடவடிக்கைக்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே போர் நடந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா உள்ளிட்டவை அடங்கியது பாலஸ்தீனம்.
இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நம் நாடு உள்ளது. அதே நேரத்தில், இஸ்ரேல், பாலஸ்தீனம் என இரு நாடுகள் தீர்வுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா, துவக்கத்தில் இருந்தே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்.
நம் நாட்டுக்கான பாலஸ்தீன துாதரகத்தின் பொறுப்பு அதிகாரி அபேட் எல்ராஜெக் அபு ஜாசெர், பிரியங்காவை சமீபத்தில் சந்தித்தார். கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் வென்றதுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், பார்லிமென்டுக்கு நேற்று வந்த பிரியங்கா, கையில் ஒரு பையை வைத்திருந்தார். அதில் பாலஸ்தீனம் என்று அச்சிடப்பட்டு உள்ளது. மேலும், பாலஸ்தீனம் தொடர்பான சின்னங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.,வின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் கட்சியினர், தங்களுடைய நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதற்கு கடைசி வாய்ப்பாக பிரியங்காவை எதிர்பார்த்தனர். இந்த பார்லிமென்ட் கூட்டத்தொடர் முடிந்ததும், காங்கிரஸ்காரர்கள், இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்.
ராகுலைவிட மிகப்பெரிய பேரிடர் பிரியங்கா. பாலஸ்தீன ஆதரவு பை வைத்திருப்பதுதான், ஆதிக்கத்தை எதிர்ப்பது என்று அவர் நினைக்கிறார்; அது சரிதான். முஸ்லிம்களுக்கு இதைவிட வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முடியாது. காங்கிரஸ் தான், புதிய முஸ்லிம் லீக்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் கூறிஉள்ளதாவது:
கையில் பையை வைத்து, எவ்வளவு பெரிய கருத்தை அவர் தெரிவித்துள்ளார். ஆனால், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடக்கும்போது அவர் மவுனமாகவே இருப்பார்.
பார்லிமென்ட் என்பது, 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இடம். மக்கள் பிரச்னையை பேசவிடாமல், பார்லிமென்டை காங்கிரஸ் முடக்கி வருகிறது. அதே நேரத்தில், பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும். இதைவிட முட்டாள்தனமான விஷயம் இருக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.