பிரியங்காவின் 'டிசைன்' பை விளையாட்டு அன்று பாலஸ்தீனம்; நேற்று வங்கதேசம்
பிரியங்காவின் 'டிசைன்' பை விளையாட்டு அன்று பாலஸ்தீனம்; நேற்று வங்கதேசம்
ADDED : டிச 18, 2024 12:53 AM

புதுடில்லி, பாலஸ்தீனம் என்ற வாசகம் அடங்கிய கைப்பையுடன் பார்லிமென்ட்டுக்கு நேற்று முன்தினம் வந்த பிரியங்கா, வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்பான வாசகம் அடங்கிய பையுடன் நேற்று வந்தார்.
கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து முதல்முறையாக எம்.பி.,யாகி உள்ளார் ராகுலின் சகோதரி பிரியங்கா.
இவர், தன் அதிரடி பேச்சுக்களால் சபையில் சலசலப்பை ஏற்படுத்துகிறாரோ இல்லையோ, விதவிதமான பொருட்களை எடுத்து வந்து பரபரப்பை ஏற்படுத்துகிறார்.
பார்லிமென்ட் கூட்டத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் வந்த பிரியங்கா, பாலஸ்தீனம் என்ற வாசகம் அடங்கிய கைப்பையை தன்னுடன் எடுத்து வந்தார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போரில், பாலஸ்தீனத்துக்கு அவர் அளித்து வரும் ஆதரவை வெளிப்படுத்தவே, அவர் அந்த பையை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பா.ஜ., - எம்.பி.,க்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து பிரியங்காவிடம் கேட்ட போது, “நான் என்ன உடை அணிய வேண்டும்; என்ன பை வைத்திருக்க வேண்டும் என்பதை யார் முடிவு செய்வது? என் விருப்பத்தை எதிர்ப்பது ஆணாதிக்க மனநிலை,” என்றார்.
இந்நிலையில், பிரியங்கா லோக்சபாவுக்கு நேற்று வந்தபோது, வேறொரு புதிய பையை கையில் வைத்திருந்தார். எம்.பி.,க்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு ஆர்வமுடன் அதை பார்த்தனர்.
அதில், 'வங்கதேசத்தில் தாக்குதலுக்கு உள்ளாகும் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக நிற்போம்' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. பிரியங்காவின் டிசைன் பைகள், எம்.பி.,க்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.