என்னை கொல்ல காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சதித்திட்டம்; மத்திய அமைச்சர் பகீர்
என்னை கொல்ல காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சதித்திட்டம்; மத்திய அமைச்சர் பகீர்
ADDED : ஏப் 21, 2025 07:13 AM

சண்டிகர்: தன்னையும், பஞ்சாப்பில் முக்கிய அரசியல்வாதிகளை கொலை செய்ய காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சதித்திட்டம் போட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு கூறியுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு தேச விரோத செயலில் ஈடுபட்டதாக 'வாரிஸ் பஞ்சாப் தே' எனும் சீக்கிய தன்னார்வ அரசியல் குழுவின் தலைவர் கதூர் சாஹிப் தொகுதியின் எம்.பி., அம்ரித்பால் சிங் தேசிய பாதுகாப்பு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார். தற்போது, அவரது காவலை மேலும் ஓராண்டுக்கு ஆம்ஆத்மி அரசு நீட்டித்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்துள்ள அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பியதாகக் கூறப்படும் மெசேஜ்களின் ஸ்கீரின் ஷாட்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோர் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங், 'இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். காலிஸ்தான் ஆதரவு பெற்ற 'வாரிஸ் பஞ்சாப் தே' என்னை கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளனர்,' எனக் கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது; என்னுடைய தாத்தா பஞ்சாப்பில் அமைதிக்காக உயிரை தியாகம் செய்தவர். நான் தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன். பஞ்சாப்பை மீண்டும் இருளில் மூழ்க அனுமதிக்க மாட்டேன், என்றார்.

