நிலம் விற்பனையில் ஊழல்; மஹா., கூட்டணி அரசுக்கு சிக்கல்
நிலம் விற்பனையில் ஊழல்; மஹா., கூட்டணி அரசுக்கு சிக்கல்
UPDATED : நவ 09, 2025 07:58 AM
ADDED : நவ 09, 2025 05:20 AM

மஹாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஆனால், ஏதாவது ஒரு பிரச்னை தலைதுாக்கி, பா.ஜ.,வை சிக்கலில் ஆழ்த்தி வருகிறது. துணை முதல்வரும், தேசியவாத காங்., கட்சி தலைவருமான, அஜித் பவாரின் மகன் பார்த் பவாரால் இப்போது புதிய பிரச்னை.
புனேவில், 40 ஏக்கர் அரசு நிலத்தை துணை முதல்வரின் மகன் நிறுவனம் வாங்கியது. 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அரசு நிலம், வெறும், 300 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. 'அஜித் பவாரின் அதிகாரம் தான் இந்த ஊழலுக்கு காரணம்' என, அனைத்து எதிர்க்கட்சிகளும் களத்தில் குதித்தன.
'இதற்கும், எனக்கும் சம்பந்தமில்லை' என, அஜித் பவார் மறுத்தாலும், விவகாரம் நிற்கவில்லை. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கும் அண்ணா ஹசாரே இந்த விவகாரத்தில் அஜித் பவாரை குற்றஞ்சாட்டினார். இது முதல்வருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. ஆனால், அஜித் பவாரின் உறவினரும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, பவாருக்கு ஆதரவாக அறிக்கை விட்டார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தர விட்டார் முதல்வர். 'பெரும் ஊழல் நடந்துள்ளது' என, இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது விசாரணைக் குழு. இதையடுத்து, நிலம் வாங்கியது ரத்து செய்யப்பட்டது; அரசு அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்; வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில், அஜித் பவாரின் மகன் பார்த் பெயர் இடம்பெறவில்லை; இது மேலும் பிரச்னையை அதிகரித்துள்ளது. 'நிலம் வாங்கும் பத்திரத்தில், யார் கையெழுத்திட்டனரோ, அவர்கள் மீதுதான் வழக்கு பதிவு செய்ய முடியும்' என, போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டாலும், இதை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றனர்.
நிலம் வாங்கிய நிறுவனத்தின், 99 சதவீத பங்குகளை, பார்த் வைத்திருந்தாலும், நிறுவனத்தின் பார்ட்னர் பாட்டீல் மீதுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

