மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!: ராஜ்யசபாவில் பா.ஜ., பலம் குறைந்தது
மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!: ராஜ்யசபாவில் பா.ஜ., பலம் குறைந்தது
ADDED : ஜூலை 16, 2024 01:14 AM

ராஜ்யசபாவில் நான்கு நியமன எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து, தே.ஜ., கூட்டணியின் பலம் 101 ஆக குறைந்துள்ளதால், மசோதாக்களை நிறைவேற்றுவதில் பா.ஜ., அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ராஜ்யசபாவின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 245. தற்போதைய நிலவரப்படி 225 உறுப்பினர்கள் உள்ளனர். 20 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, பெரும்பான்மைக்கு 113 உறுப்பினர்கள் தேவை.
இந்நிலையில், நியமன உறுப்பினர்களான ராகேஷ் சின்ஹா, ராம் ஷாகல், சோனல் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி உள்ளிட்ட நான்கு எம்.பி.,க்களின் பதவிக்காலம் கடந்த 13ம் தேதி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து ராஜ்யசபாவில் பா.ஜ., எம்.பி.,க்களின் எண்ணிக்கை, 86 ஆக குறைந்தது. தே.ஜ., கூட்டணியின் மொத்த பலம், 101 ஆக உள்ளது.
இண்டியா கூட்டணி
'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்களின் பலம் 87 ஆக உள்ளது. இதில் காங்., 26, திரிணமுல் காங்., 13, ஆம் ஆத்மி மற்றும் தி.மு.க.,வுக்கு தலா 10 எம்.பி.,க்கள் உள்ளனர்.
தே.ஜ., கூட்டணியின் பலம் 101 ஆக இருப்பதால், ராஜ்யசபாவில் மசோதாக்களை பிரச்னையின்றி நிறைவேற்ற கூடுதலாக 13 உறுப்பினர்களின் ஆதரவு பா.ஜ.,வுக்கு தேவை.
அந்த வகையில், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்காத ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், அ.தி.மு.க., மற்றும் பி.ஆர்.எஸ்., போன்ற கட்சிகளை பா.ஜ., சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசுக்கு 11, அ.தி.மு.க.,வுக்கு நான்கு எம்.பி.,க்கள் உள்ளனர். ஒருவேளை ஜெகன்மோகன் ரெட்டி ராஜ்யசபாவில் பா.ஜ.,வை ஆதரித்தாலும், அ.தி.மு.க., ஆதரவு கிடைப்பது சந்தேகமே.
ராஜ்யசபாவில் ஒன்பது உறுப்பினர்களை வைத்துள்ள பிஜு ஜனதா தளமும் இந்த முறை பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை.
இதற்கு முன் இந்த கட்சிகள் எல்லாம், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தே.ஜ., கூட்டணி கட்சிகளாக இருந்து வந்தன. எந்த மசோதாவாக இருந்தாலும் கேட்காமலேயே அரசுக்கு ஆதரவு தந்து கொண்டிருந்தன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் எல்லாவற்றையுமே மாற்றி போட்டு விட்டது. ஒடிசா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடனான பா.ஜ.,வின் உறவு முற்றிலும் மாறி விட்டது.
இதுவரையில் இல்லாத அளவுக்கு, பிஜு ஜனதா தளம் அ.தி.மு.க., என இரு கட்சிகளுமே பா.ஜ.,வுக்கு நேர் எதிரான அரசியல் நிலைப்பாட்டை அந்தந்த மாநிலங்களில் எடுத்துள்ளன.
தாக்கம் ஏற்படுமா?
தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் இடையில் அரசியல் போர் நாளுக்குநாள் உச்சகட்டத்தை அடைந்து வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.,வோடு கூட்டணி கிடையாது என, அ.தி.மு.க., ஓங்கி அடித்து வருகிறது.
பா.ஜ.,வை எதிர்ப்பதாக கூறிவிட்டு, ராஜ்யசபாவில் மத்திய அரசு கொண்டுவரும் மசோதாக்களை ஆதரித்து ஓட்டுப் போட்டால், அ.தி.மு.க.,வுக்கும் பா.ஜ.,வுக்கும் இடையில் ரகசிய உறவு உள்ளது என்ற பிரசாரத்தை தி.மு.க., தீவிரப்படுத்தும். இது, சட்டசபைத் தேர்தலுக்கான களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதேபோல, தங்களை ஆட்சியிலிருந்தே அகற்றிவிட்ட கோபத்தில் ஒடிசாவின் பிஜு ஜனதா தளமும் உள்ளது. பா.ஜ.,வுக்கு ஆதரவு இல்லை என்று வெளிப்படையாக கூறி, அக்கட்சியின் எம்.பி.,க்கள் இண்டியா கூட்டணி எம்.பி.,க்களோடு சேர்ந்து வெளிநடப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தன் பரம எதிரிகளான சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரோடு சேர்ந்து, ஆந்திராவில் தன்னை வீழ்த்தி ஆட்சியையும் பறித்துக் கொண்ட ஆதங்கம் ஜெகன்மோகனுக்கு உள்ளது. எனவே, இந்த மூன்று கட்சிகளுமே, கடந்த காலத்தை போல மத்திய அரசுக்கு ஆதரவு வழங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நியமன எம்.பி.,
வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த சந்தேகம் நிஜமானால் பா.ஜ.,வின் நிலை திண்டாட்டமாகி விடும். இந்த கட்சிகளின் ஆதரவு மட்டுமல்லாது இரண்டு சுயேச்சை மற்றும் ஏழு நியமன எம்.பி.,க்களின் ஆதரவை கண்டிப்பாக பா.ஜ., உறுதி செய்தால் மட்டுமே மசோதாக்களை நிறைவேற்ற முடியும்.
இருப்பினும், காலியாக உள்ள நியமன எம்.பி.,க்களின் பதவிகளையும் மத்திய அரசு விரைந்து பூர்த்தி செய்தாக வேண்டும். அப்போதுதான், இந்த கட்சிகளைச் சார்ந்து இருக்கும் நிலையிலிருந்து ஓரளவுக்காவது விடுபட முடியும்
- நமது டில்லி நிருபர் -.

