'சம்பக்' ரோபோ நாய்க்கு சிக்கல்; கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ்
'சம்பக்' ரோபோ நாய்க்கு சிக்கல்; கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ்
ADDED : மே 01, 2025 05:02 AM

புதுடில்லி : ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் தோன்றும் 'சம்பக்' என்ற 'ரோபோ' நாய் தொடர்பாக, அதே பெயரிலான பத்திரிகை வழக்கு தொடர்ந்துள்ளது.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் ரசிகர்களை கவரும் விதத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் 'சம்பக்' என்ற ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மைதானத்தில் ஓடுவது, நடப்பது, கை குலுக்குவது, உட்காருவது என வீரர்கள், ரசிகர்கள், வர்ணனையாளர்கள், 'சியர் லீடர்ஸ்' உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் கவர்கிறது. மேலும், தலையின் முன்பக்கத்தில் கேமரா பொருத்தப்பட்டு ஒளிபரப்பு ரீதியாகவும் உபயோகமாக உள்ளது.
இந்நிலையில், 'சம்பக்' என்ற பெயருக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றத்தில், 'டில்லி பிரஸ் பத்ரா பிரகாஷன் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் கடந்த 1968ல் இருந்து, 'சம்பக்' என்ற குழந்தைகள் இதழை நடத்தி வருகிறது.
எனவே, பிரபலமாக இருக்கும் தங்கள் பத்திரிகையின் பெயரை பயன்படுத்தி இருப்பதாக, பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எதிராக அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சவுரப் பானர்ஜி முன் நடந்த விசாரணையில், 'சம்பக்' பத்திரிகை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் குப்தா, 'ஐ.பி.எல்., என்பது வணிக ரீதியான வருவாய் ஈட்டும் நிகழ்ச்சி.
'எனவே, ரோபோ நாய்க்கு 'சம்பக்' என பெயர் சூட்டி இருப்பது, 'பிராண்ட்' எனப்படும் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரையை மீறும் செயல். 'சம்பக்' என்ற பெயர் பிரபலமாக இருப்பதால் வணிக ரீதியான சுரண்டல் நடக்கிறது' என்றார்.
விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி, 'கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் செல்லப்பெயர் சிகு. இது, சம்பக் பத்திரிகையில் இடம்பெறும் கதாபாத்திர பெயர்களில் ஒன்று. 'எனவே, அவருக்கு எதிராக, பத்திரிகை வெளியீட்டாளர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என கேள்வி எழுப்பினார்.
பி.சி.சி.ஐ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய் தீபக் வாதிடுகையில், ''ஒரு பூவின் பெயர் தான் சம்பக். கிரிக்கெட் பார்க்கும் மக்கள், அந்த பெயரை பத்திரிகையுடன் தொடர்புபடுத்தி பார்க்கவில்லை. ஒரு 'டிவி' தொடரின் கதாபாத்திரத்துடன் தான் தொடர்புபடுத்தி பார்க்கின்றனர்,'' என்றார்.
இதையடுத்து, இந்த வழக்கில் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும் படி பி.சி.சி.ஐ.,க்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.