'தடை உத்தரவு ஆறு மாதங்களுக்கு பின் காலாவதியாகும் நடைமுறை செல்லாது' சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
'தடை உத்தரவு ஆறு மாதங்களுக்கு பின் காலாவதியாகும் நடைமுறை செல்லாது' சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
ADDED : மார் 01, 2024 12:39 AM
புதுடில்லி: 'ஏஷியன் ரீசர்பேசிங் ஆப் ரோடு ஏஜென்சி' நிறுவன இயக்குனர் மற்றும் சி.பி.ஐ., இடையிலான வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ல் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
அதில், 'கீழமை மற்றும் உயர் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்படும் இடைக்கால தடை உத்தரவுகள் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் நீட்டிக்கப்படாவிட்டால், ஆறு மாதங்களுக்கு பின் தானாகவே காலாவதி ஆகிவிடும்' என, உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் தடை உத்தரவுகளுக்கு இது பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தி இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வுக்கு கடந்த ஆண்டு டிச., 1ல் மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த அரசியல்சாசன அமர்வு, கடந்த ஆண்டு டிச., 13ல் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பின் விபரம்:
சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் கீழமை மற்றும் உயர் நீதிமன்றங்கள் பிறப்பித்த தடை உத்தரவு, ஆறு மாதங்களுக்கு பின் தானாகவே காலாவதி ஆகும் நடைமுறை செல்லாது.
எனவே, 2018ல் பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது.
மேலும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் தங்களுக்கு கீழ் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதற்கு காலக்கெடு விதிப்பதை தவிர்க்க வேண்டும்.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும், வழக்குகளை காலக்கெடுவுக்குள் தீர்ப்பதற்கான வழிமுறைகளை உயர் நீதிமன்றங்கள் வழங்கலாம்.
வழக்குகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பது, வழக்குகள் நிலுவையில் உள்ள சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களின் விருப்பத்திற்கே விடப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

