ADDED : நவ 21, 2024 12:57 AM
புதுடில்லி முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிரான, 'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில், விசாரணைக்கு தடை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
காங்., தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தமிழகத்தைச் சேர்ந்த சிதம்பரம், மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தார். 2006ல், தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவைச் சேர்ந்த மேக்சிஸ் என்ற நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில், 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்ததது.
விதிகளை மீறி இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு சிதம்பரத்தின் மகனும், தற்போதைய சிவகங்கை தொகுதி எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து சி.பி.ஐ., - அமலாக்கத் துறை வழக்கு பதிந்து விசாரிக்கின்றன.
இந்த வழக்கில், 2021 நவம்பரில், சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, விசாரணை நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை - சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தன. இதை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கில் ஜாமினில் உள்ள சிதம்பரம், இதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமார் ஓஹ்ரி, சிதம்பரம் மீதான விசாரணைக்கு தடை விதித்தார்.
மேலும், குற்றப்பத்திரிகையை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்கும் படி, அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி, வழக்கை 2025 ஜன., 22க்கு ஒத்தி வைத்தார்.