ADDED : பிப் 13, 2024 07:09 AM

உத்தர கன்னடா,: அங்கன்வாடி குழந்தைகளுக்காக கிணறு தோண்டிய பெண்ணின் முயற்சியை தடுக்க நினைத்தவர்களின் எண்ணம் தோல்வியில் முடிந்தது.
உத்தர கன்னடா மாவட்டம், சிர்சியின் விநாயகா நகரில் அங்கன்வாடி மையம் அமைந்து உள்ளது. இங்கு 12க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆனால் இங்கு போதிய அளவில் குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த கவுரி நாயகா, 55, மனம் வருந்தினார். தாமாக முன்வந்து, அங்கன்வாடி வளாகத்தில் பத்து நாட்களுக்கு முன் கிணறு தோண்டும் பணியை துவக்கினார்.
இச்செய்தி சமூக வலைதளங்கள், ஊடகங்களில் வெளியாயின. இதனால் விழித்து கொண்ட மகளிர், குழந்தைகள் நலத்துறை, கிணற்றை மூடுமாறு அறிவுறுத்தினர்.
இதனால் கோபமடைந்த அப்பகுதியினர், நேற்று அங்கன்வாடிக்கு நோட்டீஸ் கொடுக்க வந்த துறை அதிகாரிகளை சரமாரியாக திட்டினர். தகவல் அறிந்து வந்த சிர்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பீமண்ண நாயகா, கிணறு தோண்ட அனுமதி வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து கவுரி நாயகா கூறியதாவது:
இந்த கிணறு தோண்டும் போது, பணியை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறினர். அப்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் பணத்துக்காக கிணறு தோண்டவில்லை.
நான் எந்த கட்சியையும் சேராதவர். எல்லோரும் என்னை அன்புடன் அழைத்து கவுரவித்தனர். என் வீட்டுக்காக கிணறு தோண்டவில்லை. பள்ளி குழந்தைகளுக்கு உதவவே வந்தேன். 12 அடி ஆழம் தோண்டப்பட்டு உள்ளது. நான்கு நாட்களில் தண்ணீர் வந்துவிடும். இதற்கு அதிகாரிகள் என்னை அனுமதிக்க வேண்டும். பணிக்கு இடையூறு செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.