ADDED : நவ 14, 2024 11:55 PM
பெங்களூரு ; வக்பு வாரியம் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கூறி, பா.ஜ., -- எம்.பி., தேஜஸ்வி சூர்யா மீது பதிவான வழக்கு விசாரணைக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஹாவேரி பகுதியைச் சேர்ந்த ருத்ரப்பா எனும் விவசாயி கடந்த 2022 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு, வக்பு வாரியத்தின் நிலம் கையகப்படுத்துதலே காரணம் என பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
போலீசார் விசாரணையில், கடன் தொல்லை, விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டமே காரணம் என தெரிய வந்தது.
வக்பு வாரியம் குறித்து தவறான தகவலை பதிவிட்டதால், ஹாவேரி போலீசார், தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு பதிவு செய்தனர்.
தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. சூர்யா தரப்பில் மூத்த வழக்கறிஞர் அருண் ஷியாம் வாதிட்டார்.
'இறந்தவரின் தந்தை கூற்றின்படியே டுவிட்' செய்யப்பட்டது. போலீசின் விளக்கத்திற்கு பின், 'டுவிட்' நீக்கப்பட்டது. எனவே, வழக்கு விசாரணையை ரத்து செய்ய வேண்டும்' என கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேஜஸ்வி சூர்யா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தனர்.