மெட்ரோ ரயில் நிலையம் மீது 'ஆடிட்டோரியம்' கட்ட திட்டம்
மெட்ரோ ரயில் நிலையம் மீது 'ஆடிட்டோரியம்' கட்ட திட்டம்
ADDED : அக் 05, 2024 10:59 PM

பெங்களூரு: சிவாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தின் மீதுள்ள, 2 ஏக்கர் நிலத்தில் ஆடிட்டோரியம் மற்றும் விளையாட்டு மையம் அமைக்க அரசுஆலோசிக்கிறது.
பெங்களூரின், சிவாஜி நகரில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள், பெரும்பாலும் முடிந்துள்ளன. அரசிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்தை, பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் திருப்பி கொடுத்துள்ளது.
சுரங்க மெட்ரோ நிலையம் மீது, 2 ஏக்கர் நிலம் வெற்றிடமாக உள்ளது. இதை பொது மக்களுக்கு தேவையானபடி பயன்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.
சிவாஜி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத், அதிகாரிகளுடன் சென்று அந்த இடத்தை பார்வையிட்டார்.
அப்போது அவர், 'மேற்கத்திய நாடுகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில், பொது மக்களுக்கு பொழுது போக்கு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
'அதே போன்று பெங்களூரிலும் அமைக்கலாம். சிவாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையம் மீது ஆடிட்டோரியம், விளையாட்டு மையம் அமைப்பது குறித்து, திட்டம் தயாரியுங்கள்' என உத்தரவிட்டார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
சிவாஜிநகர் மெட்ரோ ரயில் நிலையம் மீது, ஆடிட்டோரியம் கட்ட ஆலோசிக்கிறோம். சங்கீத நிகழ்ச்சிகள் உட்பட, மற்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக்கூடம் கட்டலாம். இந்த இடம் மற்ற பகுதிகளுக்கு, முன் மாதிரியாக இருக்கும். திட்ட பணிகள் முடிய இரண்டரை முதல், மூன்று ஆண்டுகள் ஆகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.