பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டம்: அசாமில் துவக்கம்
பெண்களை லட்சாதிபதியாக்கும் திட்டம்: அசாமில் துவக்கம்
ADDED : ஜன 13, 2024 12:32 AM

குவஹாத்தி: அசாமில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநிலத்தில், பெண்களை தொழில்முனைவோராக உயர்த்தி, அவர்களை லட்சாதிபதிகளாக்கும் திட்டமான, 'லட்சாதிபதி சகோதரி' நேற்று துவக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், மகளிர் சுய உதவிக்குழுவில் அங்கம் வகிக்கும் பெண்களுக்கு, முதல் ஆண்டு 10,000 ரூபாய் உதவித் தொகை அளிக்கப்படும்.
அதன் பின், அரசு உதவித் தொகையாக 12,500 ரூபாயும், வங்கிக் கடனாக 12,500 ரூபாயும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்படும்.
இந்த, 35,000 ரூபாய் உதவித் தொகையை பெற, மகளிர் துவங்க உள்ள சுய தொழில் குறித்த திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 40 லட்சம் பெண்களுக்கு இந்த உதவித் தொகை அளிக்கப்பட உள்ளது.
''அசாமின் மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நலத்திட்டம் இருக்கும்,'' என, முதல்வர் ஹிமந்தா தெரிவித்தார்.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விரும்பும் பெண்கள், பொதுப்பிரிவு அல்லது இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு மூன்று குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது.
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு நான்கு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது.
இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பு வோர் மூன்று உறுதி மொழிகளை அரசுக்கு அளிக்க வேண்டும்.
அதன்படி, பயனர்கள் தங்கள் பெண் குழந்தையை பள்ளியில் சேர்த்திருக்க வேண்டும், வயது குறைவாக இருந்தால், பள்ளியில் சேர்ப்பது தொடர்பாக உறுதிமொழி அளிக்க வேண்டும்.
மூன்றாவதாக பசுமை திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள மரங்கள் செழித்து வளர்வதை, பயனாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.