ADDED : பிப் 20, 2024 07:04 AM

பெங்களூரு: ''கர்நாடக அரசின் வாக்குறுதித் திட்டங்களால், 4.50 கோடி மக்கள் பயனடைகின்றனர்,'' என, சட்டமேலவை காங்கிரஸ் உறுப்பினர் உமாஸ்ரீ தெரிவித்தார்.
சட்டமேலவையில் கவர்னர் உரை மீதான விவாதத்தில், காங்., உறுப்பினர் உமாஸ்ரீ பேசியதாவது:
அரசு செயல்படுத்திய, அன்னபாக்யா, கிரஹ ஜோதி, கிரஹ லட்சுமி, சக்தி, யுவநிதி ஆகிய ஐந்து வாக்குறுதித் திட்டங்களால், 4.50 கோடி மக்கள் பயனடைகின்றனர். அன்றாட அத்தியாவசியப் பொருட்கள், மின் கட்டணம், வேலையில்லா திண்டாட்டம், வறுமை, பெண்களின் முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு, ஐந்துத் திட்டங்களை செயல்படுத்தியது.
எந்த காரணத்தை கொண்டும், வாக்குறுதித் திட்டங்களை அரசு திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அன்னபாக்யா, உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. ஐந்து கிலோ அரிசிக்கு பதிலாக பணம் வழங்கப்படுகிறது. 2024 ஜூலை இறுதி வரை, பயனாளிகளின் கணக்குக்கு 4,595 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
கிரஹ ஜோதி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் 1.60 கோடி மக்கள் பயனடைகின்றனர். கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 17,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 1.17 கோடி பெண்களுக்கு 11,037 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது.
சக்தி திட்டத்தின் கீழ், பெண்கள் இலவசமாக பஸ்களில் பயணம் செய்கின்றனர். 3.5 கோடி பெண்கள் பயன்பெற்றுள்ளனர். திட்டத்தால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. திருத்தலங்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளது. யுவநிதி திட்டம் மூலம் பட்டதாரிகளுக்கு, டிப்ளமோ படித்தவர்களுக்கு முறையே 3,000 மற்றும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
ஐந்து வாக்குறுதித் திட்டங்களும், மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. பசவண்ணர் தத்துவத்தின்படி, அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

