பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்த வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
UPDATED : அக் 25, 2024 11:25 PM
ADDED : அக் 25, 2024 10:25 PM

புதுடில்லி: காற்று மாசடைந்து வரும் நிலையில், பொது போக்குவரத்தை பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பது, பயிர்க்கழிவுகளை எரிப்பதை தடுப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
டில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் காற்று மோசமடைந்து வருகிறது. இதனையடுத்து டில்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது குறித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்நிலையில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் மத்திய சுகாதாரத்துறை சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் அதுல் கோயல் கூறியுள்ளதாவது: காற்று மாசுபாடு சமீபகாலமாக ஒரு தீவிரமான சுகாதார சவாலாக மாறி உள்ளது. காற்றுத் தரக் குறியீடு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிதமான மற்றும் மோசமான நிலையை எட்டி உள்ளது. வரவிருக்கும் பண்டிகைக்காலம் மற்றும் குளிர்காலத்தின் துவக்கத்தில் இது இன்னும் மோசம் அடையக்கூடும்.
குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் போன்றவர்கள் அதிக பாதிப்பு அபாயங்களை எதிர்கொள்கின்றனர். எனவே மாநில அரசுகள் அவற்றின் தயார் நிலையை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பொது விழிப்புணர்வு பிரசாரங்களை தீவிரப்படுத்துவதுடன், மீடியாக்கள் மூலம் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
விழிப்புணர்வு மூலம் குப்பைகள் மற்றும் கழிவுகள் எரிப்பதை தடுத்தல், பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதை குறைத்தல், பொது போக்குவரத்தை ஊக்குவித்தல், டீசல் அடிப்படையிலான ஜெனரேட்டர்களை நம்பியிருப்பதை கட்டுப்படுத்துதல் மற்றும் புகைபிடிப்பதை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அதிக நெரிசலான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டில் சமையல் மற்றும் விளக்குகளுக்கு சுத்தமான எரிபொருளை தேர்வு செய்வது, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி போன்ற வெளிப்புற நடவடிக்கைகள் கட்டுப்படுத்த வேண்டும்.
வயதானவர்கள், கர்ப்பிணிகள் போன்ற பாதிக்கப்படக் கூடிய மக்கள், சுவாசம் மற்றும் இதய நோய்கள் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், மோசமான காற்றின் தரம் காரணமாக அசவுகரியத்தை அனுபவிப்பவர்கள் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.