ADDED : ஜன 08, 2024 06:49 AM
பெங்களூரு: வருவாயை அதிகரிக்க, பல வழிகளை கையாளும் பெங்களூரு மாநகராட்சி, தற்போது தனக்கு சொந்தமான சொத்துக்களை, இன்றைய மார்க்கெட் விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி, பல ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சொத்து வரி, விளம்பர வரி உட்பட, மற்ற வருவாய்களை நம்பியுள்ளது.
இதற்கு முன் தன் சொத்துக்களை வங்கியில் அடமானம் வைத்து, கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்றுள்ள மாநகராட்சி, தற்போது சொத்துக்களை இன்றைய மார்க்கெட் விலைக்கு விற்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிகளின் சொத்துக்களை பாதுகாக்கவே, 'பெங்களூரு மாநகராட்சி சொத்து நிர்வகிப்பு விதிமுறைகள் - 2023' அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, புதிய விதிமுறைகள் கொண்டு வர அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.
வரைவு விதிமுறைப்படி, அரசிடம் முன் கூட்டியே அனுமதி பெற்று, மாநகராட்சியின் சொத்துக்களை விற்கலாம். பகிரங்க ஏலம் மூலமாக சொத்துக்களை விற்க வேண்டும் என்பது விதிமுறை.
பல ஆண்டுகள் ஒப்பந்தத்துக்கு, சொத்துக்களை கொடுப்பது, வாடகை அடிப்படையில் கொடுப்பதற்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது.
பெங்களூரில் மாநகராட்சிக்கு சொந்தமான, 6,815 சொத்துக்கள் உள்ளன. நகரின் இதய பகுதியில் 234 சொத்துக்கள், ஒப்பந்தத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 78.19 லட்சம் சதுர அடி பரப்பளவிலான நிலம், ஒப்பந்தத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை மிகவும் குறைவான தொகைக்கு அளிக்கப்பட்டதால், மாநகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில், தன் சொத்துக்களை விற்பனை செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ஆனால் மத்திய, மாநில அரசுகளின் துறைகள், அரசு நிறுவனங்கள், கார்ப்பரேஷன், வாரியங்கள் உட்பட, அரசு சார்ந்த துறைகளுக்கு மட்டுமே விற்க முடியும். தனியார் வாங்க அனுமதியில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.