'போதை ராணி'க்கு சொந்தமான ரூ.4 கோடி சொத்து பறிமுதல்
'போதை ராணி'க்கு சொந்தமான ரூ.4 கோடி சொத்து பறிமுதல்
ADDED : ஜூலை 21, 2025 12:24 AM
புதுடில்லி: போதை பொருள் விற்பனையில் கொடிகட்டி பறந்த டில்லியை சேர்ந்த பெண் தாதாவின், 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
டில்லி சுல்தான்புரியைச் சேர்ந்தவர் குசும். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக ஹெராயின், கஞ்சா உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தார்.
இதனால் போதை ராணி என்று அழைக்கப்பட்டார். இந்த பெண் தாதாவின் வீட்டில் கடந்த மார்ச் மாதம் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் இருந்த குசுமின் மகனை கைது செய்த போலீசார் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.
எனினும் போதை ராணி குசும் தப்பியோடிவிட்டார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே அவர் மீது 12 போதை பொருள் விற்பனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. குசுமின் இரு மகள்களின் வங்கிக் கணக்குகளில், கடந்த 18 மாதங்களில் மட்டும் 2 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், குசுமுக்கு சொந்தமான வீடுகள் உட்பட எட்டு அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 4 கோடி ரூபாய்.