உ.பி.,யில் மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: கலவரத்தில் 3 பேர் பலி
உ.பி.,யில் மசூதியை ஆய்வு செய்ய எதிர்ப்பு: கலவரத்தில் 3 பேர் பலி
ADDED : நவ 24, 2024 11:45 PM

சம்பல், நவ. 25-
உத்தர பிரதேசத்தில் மசூதியை ஆய்வு சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கல் வீச்சில் ஈடுபட்டவர்கள், வாகனங்களுக்கு தீ வைத்தனர். இந்த வன்முறை சம்பவத்தில், மூன்று பேர் பலியாகினர்; 30 போலீசார் காயம் அடைந்தனர்.
உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இங்கு ஏற்கனவே ஹிந்து கோவில் இருந்ததாகவும், அதை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சம்பல் சிவில் நீதிமன்றம், மசூதியில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது.
இரு தரப்பினர் முன்னிலையில், நீதிமன்ற ஆணையர் மற்றும் அதிகாரிகள் மசூதியை கடந்த 5ம் தேதி ஆய்வு செய்தனர். இதையடுத்து, இரண்டாவது முறையாக ஆய்வு செய்ய, மசூதிக்கு நேற்று காலை 7:00 மணிக்கு அவர்கள் சென்றனர்.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சு நடந்து கொண்டிருந்த போதே கூட்டத்தில் இருந்த சிலர், அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். ஒரு சிலர், அங்கிருந்த இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியே போர்க்களமாக மாறியது. அதிகாரிகளை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் சென்ற போலீசார், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர்.
சில மணி நேரப் போராட்டத்துக்கு பின் நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் பலியாகினர்; 30 போலீசார் காயமடைந்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வன்முறையில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் வந்ததை அடுத்து, திட்டமிட்டபடி மசூதியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு நடவடிக்கை முழுதும் புகைப்படம் மற்றும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் அதிகாரிகள் நாளை சமர்ப்பிக்க உள்ளனர். இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜன., 29க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.