108 அடி உயர கம்பத்தில் ஹனுமன் கொடி போலீசார் அகற்றியதை கண்டித்து போராட்டம் நடுரோட்டில் போலீஸ் தடியடி, 144 தடை உத்தரவு
108 அடி உயர கம்பத்தில் ஹனுமன் கொடி போலீசார் அகற்றியதை கண்டித்து போராட்டம் நடுரோட்டில் போலீஸ் தடியடி, 144 தடை உத்தரவு
ADDED : ஜன 29, 2024 07:16 AM

மாண்டியா: மாண்டியாவில் அரசு நிலத்தில், 108 அடி உயர கொடிக்கம்பம் நட்டு, அதில் ஆஞ்சநேயர் உருவம் பொறித்த காவிக் கொடியை கிராம மக்கள் ஏற்றினர். இதை போலீசார் அகற்றியதால் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை ஒட்டி, மாண்டியா மாவட்டம், கெரகோடு கிராமத்தில் கொண்டாட, இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நினைத்தனர்.
* அனுமதி கேட்பு
இதற்காக, சுற்றுவட்டாரத்தின் 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் சேர்ந்து, தங்கள் சொந்த செலவில், கிராமத்தில் உள்ள மாரம்மா கோவில் தெருவில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில், 108 அடி உயரத்தில் கொடி கம்பம் அமைத்து, ஹனுமன் கொடி ஏற்ற, கிராம பஞ்சாயத்து முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 22 உறுப்பினர்களில், 20 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், கிராம பஞ்சாயத்தோ, 'தேசிய கொடியை தவிர, எந்த மத, அரசியல் கொடியை ஏற்ற கூடாது' என கூறி அனுமதி மறுத்தது.
இருப்பினும், கிராம மக்களும், ஹிந்து அமைப்பினரும் சேர்ந்து கொடிக் கம்பம் அமைத்தனர். அதில் ஆஞ்சநேயர் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை ஏற்றினர்.
* எதிர்ப்பு
இதையறிந்த மாவட்ட நிர்வாகம், அரசு நிலத்தில் ஹனுமன் கொடி ஏற்றப்பட்டுள்ளதால், அதை அகற்றுமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன்படி, தாலுகா பஞ்சாயத்து செயல் அலுவலர் வீணா, ஹனுமன் கொடியை அகற்ற கிராமத்துக்கு வந்தார். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் அங்கிருந்து சென்ற அதிகாரிகள், நேற்று முன்தினம் மீண்டும் கிராமத்துக்கு வந்தனர். அப்போதும் கிராமத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையறிந்து அங்கு வந்த மாவட்ட கலெக்டர் சிவமூர்த்தி, தாசில்தார் சிவகுமார் பிராதர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த கிராம மக்கள், அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர். வேறுவழியின்றி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
* கொடியிறக்கம்
நேற்று காலை அங்கு வந்த போலீசார், ஹனுமன் கொடியை அகற்றுவது குறித்து, கிராம மக்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். அப்போது வாய் தகராறு ஏற்பட்டது. அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். பின், ஹனுமன் கொடி இறக்கப்பட்டது.
நிலைமையை கட்டுப்படுத்த, உடனடியாக கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த முதல்வர் சித்தராமையா, உடனடியாக அந்த கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்ற உத்தரவிட்டார். இதையடுத்து தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள், சாலையிலேயே சமையல் செய்ய துவங்கினர். அங்கிருந்த பானை தண்ணீரை கீழே கொட்டிய போலீசார், பானையை உடைத்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து, கிராம மக்களும், ஹிந்து அமைப்பினரும் ஆலோசனை நடத்தி, 'வீடுதோறும் ஹனுமன் கொடி ஏற்ற முடிவு செய்துள்ளனர்.
கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு வந்த சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், முன்னாள் அமைச்சர் அஸ்வத் நாராயணா, எம்.எல்.சி., தேஜஸ்வினி மற்றும் ம.ஜ.த., பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விவகாரத்தை அரசியல் ஆக்குகின்றனர். யார் என்று தெரியவில்லை. பஞ்சாயத்துக்கு சொந்தமான நிலத்தில் தேசியக் கொடியை ஏற்றலாம். அதை தவிர, வேறு எந்த கொடியையும் ஏற்ற முடியாது.
உள்ளூர் இளைஞர்கள், தவறாக வழி நடத்தப்படுகின்றனர். கொடியை தனி இடத்திலோ அல்லது கோவில் முன் ஏற்றவோ அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் எந்த கொடிக்கும் எதிரானவர்கள் அல்ல. இதற்கு கிராம பஞ்சாயத்து ஒப்புதல் அளித்தது தவறு. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
செலுவராயசாமி,
மாநில அமைச்சர்,
விவசாய துறை
ஹனுமன் கொடியை ஏற்ற, கிராம பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது. மாநில அரசு, குண்டர் போக்கை கடைபிடிக்கிறது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் அரசு செயல்படுகிறது.
விஜயேந்திரா,
மாநில தலைவர், பா.ஜ.,