ஆடி மாதத்தில் இறைச்சி விற்க எதிர்ப்பு: கே.எப்.சி.,க்கு போடப்பட்டது பூட்டு
ஆடி மாதத்தில் இறைச்சி விற்க எதிர்ப்பு: கே.எப்.சி.,க்கு போடப்பட்டது பூட்டு
UPDATED : ஜூலை 20, 2025 01:16 AM
ADDED : ஜூலை 20, 2025 01:13 AM

காஜியாபாத்: உ.பி.,யில், ஆடி மாதத்தையொட்டி, காஜியாபாதில் கே.எப்.சி., நசீர் புட்ஸ் உள்ளிட்ட முக்கிய அசைவ உணவகங்களை இழுத்து மூடி, ஹிந்து ரக்ஷா அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படும் ஆடியை, வட மாநிலங்களில் சாவன் மாதம் என்று அழைக்கின்றனர். இந்த மாதத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவது அங்கு வழக்கம்.
மேலும், கங்கையில் இருந்து புனித நீரை எடுத்துச் சென்று, உள்ளூர் சிவன் கோவில்களுக்கு கன்வார் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், உ.பி.,யின் காஜியாபாதில் கன்வார் யாத்திரை வழித்தடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், அசைவ உணவுக்கு முழுமையான தடை விதிக்கக்கோரி, ஹிந்து ரக்ஷா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புனித யாத்திரை செல்லும் பாதைகளை ஒட்டி இறைச்சி விற்பது, சமைப்பது பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அவர்கள் கூறினர்.
இதையடுத்து, காஜியாபாதின் வசுந்தரா பகுதியில், அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனாலும், அங்கு சென்ற ஹிந்து ரக்ஷா அமைப்பினர், கே.எப்.சி., நசீர் புட்ஸ் உள்ளிட்ட முக்கிய அசைவ உணவகங்களை இழுத்து மூடினர். போராட்டத்தின்போது, 'பாரத் மாதா கி ஜெய், ஜெய் ஸ்ரீ ராம்' போன்ற முழக்கங்களையும் எழுப்பினர்.
'லட்சக்கணக்கானோர் பக்தியில் மூழ்கியிருக்கும்போது, மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய விஷயங்களைத் தவிர்த்து, அவர்களின் நம்பிக்கையை மதிக்க வேண்டியது அவசியம்' என, போராட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆடி பண்டிகையின் போது இறைச்சி விற்பனை தொடர்ந்தால், போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் ஹிந்து ரக்ஷா அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.