ராம கீர்த்தனை பாடச் சொன்ன பாடகி சித்ராவுக்கு எதிர்ப்பு
ராம கீர்த்தனை பாடச் சொன்ன பாடகி சித்ராவுக்கு எதிர்ப்பு
UPDATED : ஜன 17, 2024 04:34 AM
ADDED : ஜன 17, 2024 01:00 AM

திருவனந்தபுரம்,அயோத்தியில், வரும் 22ம் தேதி நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று, அனைவரும் வீடுகளில் விளக்கு ஏற்றி, ராமர் கீர்த்தனைகளை பாடும்படி அழைப்பு விடுத்த பிரபல பாடகி சித்ராவை, சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்தனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது.
அன்றைய தினம், நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் விளக்கேற்றும்படி, சமீபத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், தேசிய விருது பெற்ற தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகி சித்ரா, 60, சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளிட்ட வீடியோவில், '22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தன்று, மதியம் 12:20 மணி அளவில், பொது மக்கள் ராமர் கீர்த்தனைகளை பாட வேண்டும்.
'அன்றைய தினம் மாலை, வீடுகளில் ஐந்து விளக்குகளை ஏற்ற வேண்டும்' என, வலியுறுத்தி இருந்தார். மேலும் இந்த வீடியோவில், ராமர் கீர்த்தனைகளையும் அவர் பாடியிருந்தார்.
இதனால் அதிருப்தியடைந்த ஒரு தரப்பினர், இது போன்ற செய்தியால் சித்ரா அரசியல் பக்கம் திரும்புவதாக, சமூக வலைதளத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
'தன் கருத்தை சொல்ல அவருக்கு முழு உரிமை உள்ளது' என, மற்றொரு தரப்பினர் சித்ராவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

