சித்தராமையா ராஜினாமாவை வலியுறுத்தி போராட்டம்!: மாநிலம் முழுதும் நடத்த பா.ஜ., வியூகம்
சித்தராமையா ராஜினாமாவை வலியுறுத்தி போராட்டம்!: மாநிலம் முழுதும் நடத்த பா.ஜ., வியூகம்
ADDED : செப் 26, 2024 06:36 AM
பெங்களூரு: மைசூரு நகர மேம்பாட்டு ஆணைய முறைகேடு குறித்து, உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், முதல்வர் சித்தராமையா தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார். இவரது ராஜினாமாவை வலியுறுத்தி, மாநிலம் முழுதும் போராட்டம் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இவரை ராஜினாமா செய்ய வைக்க, வியூகம் வகுக்கிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. பலத்த முயற்சிக்கு பின், இரண்டாவது முறையாக முதல்வரான சித்தராமையா, உற்சாகத்துடன் பணியாற்றினார். வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தினார். இதனால் அவரது இமேஜ் அதிகரித்தது. ஆனால், 'மூடா' முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கி திணறுகிறார்.
மைசூரில் இருந்து 40 கி.மீ., தள்ளி புறநகரில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் அண்ணனுக்கு 3.16 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த நிலத்தை அவர், தன் தங்கைக்கு, பிறந்த வீட்டு சீராக வழங்கினார். இதை, 'லே அவுட்' அமைப்பதற்காக மூடா கையகப்படுத்தியது. அதற்கு மாற்றாக, நகரின் மைய பகுதியில் 14 வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. தன் அதிகாரத்தை சித்தராமையா தவறாக பயன்படுத்தி, விதிமீறலாக மனைகள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஆபிரகாம், லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னர் தாவர்சந்திடம் அனுமதி கேட்டார். கவர்னரும் அனுமதி அளித்ததுடன், குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்டு, முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இது கர்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
கவர்னரின் நோட்டீசை கண்டித்து, காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவர்னரின் நோட்டீசை நிராகரிக்க, அமைச்சரவையிலும் தீர்மானம் கொண்டு வந்தனர். இதே விஷயத்தில் மாநில அரசு, ராஜ்பவன் இடையே பனிப்போர் ஏற்பட்டது.
தனக்கு எதிராக விசாரணை நடத்த, கவர்னர் அளித்த உத்தரவு குறித்து கேள்வி எழுப்பி, உயர் நீதிமன்றத்தில் முதல்வர் சித்தராமையா மனு தாக்கல் செய்திருந்தார். இவரது மனுவை உயர் நீதிமன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்து, விசாரணைக்கு பச்சைக்கொடி காட்டியது. இதனால் முதல்வர் தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார்.
இதனால், எதிர்க்கட்சியான பா.ஜ., சுறுசுறுப்படைந்துள்ளது. இந்த விஷயத்தை முன் வைத்து, முதல்வரது ராஜினாமாவை வலியுறுத்தி மாநிலம் முழுதும் போராட்டம் நடத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளது. மாநில தலைவர் விஜயேந்திராவின் உத்தரவுபடி, மாநிலத்தின் சில இடங்களில் மாவட்ட அளவில், நேற்று முன் தினம் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துடன் நிறுத்தாமல், தீவிரப்படுத்த பா.ஜ., முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு பேரூராட்சி முதல், மாவட்டம் வரை பா.ஜ.,வின் அனைத்து மோர்ச்சாக்கள் சார்பில் போராட்டம் நடத்த தயாராகிறது.
இதற்கு முன் மூடா முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த பின், பா.ஜ., ம.ஜ.த., இணைந்து பெங்களூரில் இருந்து, மைசூரு வரை பாதயாத்திரை நடத்தியது. கூட்டணி கட்சிகளின் போராட்டத்துக்கு, நல்ல பலன் கிடைத்தது. தற்போது முதல்வரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், எதிர்க்கட்சிகளின் போரட்டத்துக்கு மேலும் பலம் கிடைத்துள்ளது.
ஏற்கனவே, வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டை கண்டித்து, பா.ஜ., பெரிய அளவில் போராட்டம் நடத்தியதால், நாகேந்திரா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. இப்போது மூடா வழக்கில், முதல்வரின் குடும்பத்தினர் நேரடியாக சிக்கியதால், சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுத்து, ராஜினாமா செய்ய வைக்க பா.ஜ., திட்டம் வகுத்துள்ளது.
கர்நாடக அரசியல் நிலவரங்களை, பா.ஜ., மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அவ்வப்போது தலைவர்களுக்கு ஆலோசனை கூறுகிறது. எந்த நேரத்திலும் உள்ளாட்சி தேர்தல், பெங்களூரு மாநகராட்சி தேல்தல், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல் நடக்கலாம்.
எனவே காங்கிரஸ் அரசின் தோல்விகள், முதல்வர் மீதான குற்றச்சாட்டை முன் வைத்து, போரட்டம் நடத்த வேண்டும். கட்சிக்குள் ஏற்பட்ட உட்பூசல், அதிருப்தி, கருத்து வேறுபாட்டை மறந்து ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தும்படி மேலிடம் கட்டளையிட்டுள்ளது. இதன்படி மாநில பா.ஜ.,வும் தயாராகிறது.
முதல்வரை ராஜினாமா செய்ய வைக்க, வியூகம் வகுப்பதில் ஈடுபட்டுள்ளது.

