சுங்கச்சாவடியில் விலக்கு கோரி டில்லியில் போராட்டம்
சுங்கச்சாவடியில் விலக்கு கோரி டில்லியில் போராட்டம்
ADDED : ஆக 26, 2025 10:16 PM
புதுடில்லி:டில்லி முண்ட்கா பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி, அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
மேற்கு டில்லியில் உள்ள முண்ட்கா பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடியை வாகனங்களில் கடந்து செல்வதற்கு, இந்த பகுதியில் வசிக்கும் மக்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி மக்கள் ஏராளாமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தினர். சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு, அவர்கள் கலைந்து சென்றனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சுங்கச்சாவடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.