மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் மூன்று பேர் பலி; பாதுகாப்புக்கு விரைகிறது ராணுவம்
மேற்கு வங்கத்தில் வன்முறையாக மாறிய வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் மூன்று பேர் பலி; பாதுகாப்புக்கு விரைகிறது ராணுவம்
ADDED : ஏப் 13, 2025 12:50 AM

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் தந்தை - மகன் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கலவரம் நடந்த பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படைகளை நிறுத்தும்படி கொல்கட்டா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முர்ஷிதாபாத் மாவட்டத்தின் சம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் உள்ளிட்ட பகுதிகளில், மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வக்ப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக, நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது.
இதற்கு எதிராக மற்றொரு தரப்பினரும் போராட்டத்தில் குதித்தனர். இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், போலீஸ் வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் தீக்கிரையாகின.
பாதுகாப்பு படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதோடு, பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரம், மால்டா, ஹூக்ளி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களிலும் எதிரொலித்தது. தொடர்ந்து, இந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.
இந்நிலையில் முர்ஷிதாபாதில் நிகழ்ந்த வன்முறையில், மூன்று பேர் உயிரிழந்தனர். இதில், ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சம்சர்கஞ்ச் பகுதியில், தந்தை - மகனை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர். கலவரத்தை தொடர்ந்து, முர்ஷிதாபாதின் ஜாங்கிபூர் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில், மத்திய பாதுகாப்பு படைகளை நிறுத்தும்படி கொல்கட்டா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்த கலவரம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும், சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியே வன்முறைக்கு காரணம் என்றும், போலீசார் தெரிவித்துள்ளனர். சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மம்தா தவறி விட்டதாக, எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையே, வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் உனகோடி மாவட்டத்தில், வக்ப் திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நேற்று நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில், 18 போலீசார் காயமடைந்தனர்.
எதற்கு இந்த கலவரம்?
வக்ப் வாரிய திருத்த சட்டத்தில், எங்களது நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டேன். இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. மேற்கு வங்கத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது. பின், இந்த கலவரம் எதற்காக?
- மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,