ஹிந்து இளைஞர் கொலை: வங்கதேச அரசை கண்டித்து டில்லியில் போராட்டம்
ஹிந்து இளைஞர் கொலை: வங்கதேச அரசை கண்டித்து டில்லியில் போராட்டம்
ADDED : டிச 23, 2025 04:24 PM

புதுடில்லி: வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டில்லியில் உள்ள அந்நாட்டு தூதரகம் முன்பு ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
வங்கதேச மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி. கடந்த 18ம் தேதி இவர் அவாமி லீக் கட்சியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த விவரம் வெளியானவுடன் வங்கதேசத்தில் கலவரம் வெடித்தது.மைமென்சிங் நகரில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. நுாற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரின் உடலை மரத்தில் கட்டி தீயிட்டு எரித்தது. இதனை இந்தியா கண்டித்துள்ளது. டில்லியில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு போராட்டம் நடந்தது. போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் திபு சந்திர தாஸ் கொல்லப்பட்டதை கண்டித்தும் விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், இதற்குகாரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்த போராட்டம் நடந்தது.
அப்போது ' பாரத் மாதா கி ஜெய்' என கோஷம் போட்டதுடன் முகமது யூனுஷ் அரசை கண்டித்தும் கோஷம் போட்டனர். திபு சந்திர தாஸ் புகைப்படத்தையும், வங்கதேச அரசை விமர்சித்து பதாகைகளையும் அவர்கள் ஏந்தி வந்தனர். போராட்டக்காரர்களை போலீசார், தடுப்புகளை அமைத்து தடுத்தனர்.
ஆனால், தடுப்புகளை தாண்டி போராட்டக்காரர்கள் உள்ளே செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, வங்கதேச தூதரகம் முன்பு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

