பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்: சுதந்திரம் கேட்டு கோஷம்
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் தீவிரம்: சுதந்திரம் கேட்டு கோஷம்
UPDATED : மே 12, 2024 01:13 PM
ADDED : மே 12, 2024 12:19 PM

ஸ்ரீநகர்: பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அவர்கள் சுதந்திரம் வேண்டும் என கோஷம் போட்டனர். அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் போலீசார் முனைப்பு காட்டுகின்றனர்.
கடுமையான வரி விதிப்பு, பணவீக்கம், மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒடுக்க போலீசார் மும்முரமாக உள்ளனர். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் வலுத்தது. இதில் ஒரு போலீசார் உயிரிழந்தார். 90 பேர் காயமடைந்துள்ளனர்.
பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுதந்திரம் தேவை என கோஷம் போடுவது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. முஷாபராபாத் மற்றும் சில மாவட்டங்களில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினருடன் போராட்டக்காரர்கள் மோதலில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. போலீசார்,துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த போராட்டத்தை ஜம்மு காஷ்மீர் கூட்டு அவாமி குழு என்ற அமைப்பு துவக்கியது. வர்த்தகர்கள் முன்னின்று போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஸ்டிரைக் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்த இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.சுதந்திரம் கேட்டு போராட்டக்காரர்கள் கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.