தெலுங்கானாவில் உரத்தட்டுப்பாட்டால் போராட்டம்: முன்னாள் முதல்வர் மகன் ராமா ராவ் கைது
தெலுங்கானாவில் உரத்தட்டுப்பாட்டால் போராட்டம்: முன்னாள் முதல்வர் மகன் ராமா ராவ் கைது
ADDED : ஆக 31, 2025 01:36 AM

ஹைதராபாத்: தெலுங்கானாவில் நிலவும் உரத்தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.எஸ்., எனும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ஆர்., எனும் கே.டி.ராமாராவ் மற்றும் பல எம்.எல்.ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
மாநிலத்தில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடும் துயரத்தில் இருப்பதாக கூறி காலி யூரியா பைகளுடன், பி.ஆர்.எஸ்., கட்சியைச் சேர்ந்தவர்கள் ஹைதராபாத் வேளாண் ஆணையரகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை போலீசார் தடுத்து, கே.டி.ஆர்., மற்றும் பி.ஆர்.எஸ்., சட்டசபை உறுப்பினர்கள் உள்ளிட்டோரை கைது செய்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்ட கே.டி.ஆர்., திடீரென வாகனத்தில் இருந்து இறங்கி, தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக நடந்து சென்றார்.
அவர் கூறியதாவது:
தெலுங்கானாவில் நிலவும் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உரத்தட்டுப்பாடு செயற்கையானது.
விவசாயிகளின் துயரைப் போக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசை சார்ந்ததா அல்லது மாநில அரசுக்கானதா என்பதை ரேவந்த் ரெட்டி அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
கடந்த சில மாதங்களில், 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.
மக்களின் துயரங்களை புறக்கணித்து, மாநில அரசு, அரசியல் நலன்களுக்கு உதவும் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.
சந்திர சேகர ராவ் தலைமையிலான 10 ஆண்டுகால அரசில் இதுபோன்ற அவல நிலை விவசாயிகளுக்கு நேரவில்லை. உரத்தட்டுப்பாடு என்ற பேச்சே எழவில்லை.
தற்போது எப்படி பற்றாக்குறை ஏற்பட்டது. கனமழை, விவசாயிகளின் துயரம், நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதி, பயிர் இழப்புகள் குறித்து விவாதிக்க, 15 நாள் சட்டசபை கூட்டத்தை மாநில அரசு உடனடியாக கூட்ட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.