இந்திய கடற்படையை நினைத்து பெருமிதம்: கடற்கொள்ளையர்களிடம் மீட்கப்பட்ட மாலுமிகள் உருக்கம்
இந்திய கடற்படையை நினைத்து பெருமிதம்: கடற்கொள்ளையர்களிடம் மீட்கப்பட்ட மாலுமிகள் உருக்கம்
UPDATED : ஜன 06, 2024 06:19 PM
ADDED : ஜன 06, 2024 05:53 PM

புதுடில்லி: சோமாலியா அருகே இந்திய மாலுமிகள் 15 பேருடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் கடத்தல் சம்பவத்தை இந்திய கடற்படை அதிரடியாக செயல்பட்டு முறியடித்தனர். கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்டு, இந்திய கடற்படைக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.
அரபிக்கடலில் ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில், லைபீரியன் நாட்டு கொடியுடன் 'எம்.வி.லிலா நோர்போல்க்' என்ற சரக்கு கப்பல் நேற்று முன்தினம் (ஜன.,04)பயணித்தது. பிரேசில் நாட்டின் டுஅகோ துறைமுகத்தில் இருந்து பஹ்ரைனின் கலிபா பின் சல்மான் துறைமுகம் நோக்கி சென்ற கப்பலில், இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேர் இருந்தனர். சோமாலியாவுக்கு கிழக்கே 300 கடல் மைல் தொலைவில் சென்ற போது, அந்த கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இது குறித்து தகவலறிந்த இந்திய கடற்படை உஷார்படுத்தப்பட்டனர். நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பல், கடத்தப்பட்ட கப்பல் சென்ற திசைக்கு திருப்பி விடப்பட்டது. மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் அங்கு விரைந்தன. கடற்படை வீரர்களின் வருகையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றதால், கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.கப்பலில் இருந்த 15 இந்திய மாலுமிகளும், ஆறு பிலிப்பைன்ஸ் மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், மீட்கப்பட்ட இந்தியர்கள் 'பாரத் மாதா கி ஜெய்' என்று கோஷமிட்டு, இந்திய கடற்படைக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவை இந்திய கடற்படை வெளியிட்டு உள்ளது. நெட்டிசன்கள் இந்திய கடற்படைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மாலுமி ஒருவர் கூறுகையில், 24 மணி நேரமாக கப்பலில் சிக்கியிருந்தோம். இந்திய கடற்படை மீட்ட பிறகு தான் நிம்மதி அடைந்தோம் என்றார்.
மற்றொரு மாலுமி கூறுகையில், இந்திய கடற்படையை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்தார்.