ADDED : மே 19, 2024 12:25 AM

வாரணாசி: வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடி, வேட்பு மனு தாக்கல் செய்த போது, அவருடன் இருந்தவர் கணேஷ்வர் சாஸ்திரி டிராவிட் என்கிற தமிழர். இவர் தான் மோடியின் வேட்பு மனுவை முன் மொழிந்தவர்.
சாஸ்திரி ஒரு பெரிய வித்வான்; தலை சிறந்த ஜோதிடர். இவருடைய ஜோதிட ஞானத்தை போற்றாதவர்கள் இல்லை. அத்துடன், எது நல்ல நேரம் என்பதை கணிப்பதில் வல்லுனர். அயோத்தி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுவதற்கான நேரம், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் சமயம் என, அனைத்தையும் குறித்து கொடுத்தவர் கணேஷ்வர் சாஸ்திரி.
இவர் தமிழராக இருந்தாலும், காசியின் மீராகாட்டில் வசிக்கிறார். இவருடைய அப்பா ராஜேஷ்வர் சாஸ்திரி வேத விற்பன்னர். இவருடைய இரண்டாவது மகன் தான் கணேஷ்வர். முதல் மகன் விஷ்வேஸ்வர் சாஸ்திரி. அண்ணனும், தம்பியும் சேர்ந்து நேரம் கணித்து தருகின்றனர். அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டைக்கு, ஸ்பெஷல் முகூர்த்த நேரமான, 84 வினாடிகளை இவர்கள் இருவரும் கணித்து கொடுத்துள்ளனர்.
காசி விஸ்வநாத் தாம் என்கிற புதிய கட்டட வளாகத்திற்கு, பூமி பூஜை நடத்த நேரமும், தேதியும் இவர்கள் இருவரும் குறித்து கொடுத்தனர். டிசம்பர் 13ம் தேதி என, இவர்கள் கணித்து கொடுத்ததை, மற்ற ஜோதிடர்கள் எதிர்த்தனர்; ஆனால், சகோதரர்கள் தங்கள் கணிப்பில் தீர்க்கமாக இருந்தனர். தற்போது, காசி புதிய வளாகம் நன்றாக செயல்பட்டு வருகிறது. மோடியின் வேட்பு மனு தாக்கல் செய்யும் நேரத்தையும் இவர்கள் தான் கணித்துள்ளனர்.
