வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., சி-60 ராக்கெட்!
UPDATED : டிச 30, 2024 10:42 PM
ADDED : டிச 30, 2024 10:00 PM

ஸ்ரீஹரிகோட்டா: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (டிச.,30) இரவு 10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ, இஸ்ரோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் இன்று (டிச.,30) இரவு 10 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் சுமந்து சென்றது.
ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன.
வெற்றிகரமாக ராக்கெட் விண்ணில் பாய்ந்ததால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். எதிர்காலத்தில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கவும், விண்வெளிக்கு வீரர்களை அனுப்பவும் இந்த திட்டம் பேருதவியாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஸ்பேஸ் டாக்கிங் எனப்படும் விண்வெளியில் இரு தனித்தனி விண்கலன்களை ஒன்றாக இணையச் செய்யும் தொழில்நுட்பத்தை இந்தியா வெற்றி கொண்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் இதுவரை, ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் விண்வெளி அமைப்புகளிடம் மட்டுமே உள்ளது. நான்காவதாக இந்தியாவின் இஸ்ரோ அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம், எதிர்காலத்தில் நிரந்தர விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், அதில் வீரர்கள் சென்று தங்கி ஆராய்ச்சி செய்யவும், அங்கிருந்து மீண்டும் கிளம்பி வரவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.