'செல்லாது... செல்லாது...': நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பி.டி.உஷா கருத்து
'செல்லாது... செல்லாது...': நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பி.டி.உஷா கருத்து
UPDATED : அக் 10, 2024 07:21 PM
ADDED : அக் 10, 2024 03:24 PM

திருவனந்தபுரம்: '' இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் எனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது,'' என அதன் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 2022 டிச., மாதம், தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் இச்சங்கத்தின் தலைவரான முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. பதவியேற்ற பிறகு, இவருக்கும், குழு உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கவுன்சில் உறுப்பினர்கள் விதிகளை மீறினர் என குற்றம்சாட்டிய பி.டி. உஷா, அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், தலைவருக்கான அதிகாரத்தை பயன்படுத்தி தன்னிச்சையாக செயல்படுகிறார் என அவர் மீது உறுப்பினர்கள் புகார் கூறினர்.
இச்சூழ்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் மேற்கொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தினால் சங்கத்திற்கு ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் சி.ஏ.ஜி., குற்றம்சாட்டியது. இதனை பி.டி. உஷா மறுத்த நிலையில், அவரிடம் சி.ஏ.ஜி., விளக்கமும் கேட்டு இருந்தது.
இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தில் பி.டி.உஷாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இணை செயலாளரும், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான கல்யாண் சவுபே கொண்டு வந்த தீர்மானத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்ட விதிகளை மீறியதற்காகவும், இந்திய விளையாட்டு துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக இவர் மீது தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. வரும்25ம் தேதி நடக்கும் சங்கத்தின் சிறப்பு கூட்டத்தில் இத்தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என கூறப்பட்டு இருந்தது.