ஹுன்னிகெரேயில் வில்லாக்கள் ஏலம் மூலம் பி.டி.ஏ., விற்பனை
ஹுன்னிகெரேயில் வில்லாக்கள் ஏலம் மூலம் பி.டி.ஏ., விற்பனை
ADDED : டிச 06, 2024 06:48 AM

பெங்களூரு: ஹுன்னிகெரே கிராமத்தில், புதிதாக கட்டிய வில்லாக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய. பி.டி.ஏ., முடிவு செய்துள்ளது.
இது குறித்து, பி.டி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரின் தாசனபுரா பேரூராட்சியின் ஹுன்னிகெரே கிராமத்தில் பி.டி.ஏ., வில்லாக்கள் கட்டியுள்ளது. இவைகள் ஒரு படுக்கை அறை, இரண்டு படுக்கை அறைகள், மூன்று மற்றும் நான்கு படுக்கை அறைகள் கொண்ட வில்லாக்களாகும்.
இவைகள் ஏலம் விடப்படவுள்ளன. டிசம்பர் 16ம் தேதி காலை 11:00 மணிக்கு துவங்கும் ஏலம், டிசம்பர் 17ம் தேதி மாலை 6:00 மணிக்கு முடிவடையும். ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், முதலில் பி.டி.ஏ., இணையதளத்தில் தங்களின் விபரங்களை பதிவு செய்து கொண்டு, 4 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்ய வேண்டும்.
டிபாசிட் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ள, டிசம்பர் 13 கடைசி நாளாகும். ஏலத்தில் வெற்றி கிடைக்காவிட்டால், டிபாசிட் தொகை, ஒரு மாதத்துக்குள் சம்பந்தப்பட்டோரின் கணக்கில் செலுத்தப்படும்.
மூன்று படுக்கை அறைகள் கொண்ட வில்லாக்களுக்கு, பி.டி.ஏ., 76.50 லட்சம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளது. நான்கு படுக்கை அறைகள் கொண்ட வில்லாக்களுக்கு, 1.35 கோடி ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ - ஏலத்தில் பங்கேற்போர், இதற்கும் அதிகமான தொகையை குறிப்பிட வேண்டும். அதிக தொகை குறிப்பிட்டவர்களுக்கு, வில்லா விற்கப்படும்.
ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள், வில்லாக்களின் மொத்த விலையில் 25 சதவீதம் தொகையை, பி.டி.ஏ., கூறும் கணக்கில் செலுத்த வேண்டும். அதன்பின் உரிமை பத்திரம் வழங்கப்படும். அதன்பின் பி.டி.ஏ., கூறும் தேதியில், 75 சதவீதம் பணத்தை செலுத்தி, வில்லாக்களை சொந்தமாக்கலாம்.
பி.டி.ஏ., கட்டிய வில்லாக்களில், சிறப்பான சாலைகள், ஒவ்வொரு வில்லாவுக்கும் பார்க்கிங் வசதி, மழை நீர் சேகரிக்கும் வசதி உட்பட, அனைத்து வசதிகளும் உள்ளன. கூடுதல் தகவல் வேண்டுவோர், https://karnataka.gov.in ல் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள்கூறினார்.