மீண்டும் பணி கேட்டு மனு மக்கள் நல பணியாளர் வழக்கு தள்ளுபடி
மீண்டும் பணி கேட்டு மனு மக்கள் நல பணியாளர் வழக்கு தள்ளுபடி
ADDED : செப் 03, 2025 12:15 AM
தமிழகத்தை சேர்ந்த மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம் சார்பில் தொடரப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில், பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நல பணியாளர்களை மீண்டும் அதே பணியில் அமர்த்தி ஊதிய உயர்வு வழங்கக் கோரி, மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவை, 2023, ஏப்ரல் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், 'மக்கள் நலப்பணியாளர்களுக்கான வேலை திட்டத்தை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துடன் இணைத்து செயல்படுத்த வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும்' என, தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்த மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துடன் தங்களை இணைக்கக் கூடாது என்றும், தனியாக பணி வழங்க வேண்டும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது.
இந்த சீராய்வு மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, 'ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர விரும்பவில்லை' எனக் கூறி, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
- டில்லி சிறப்பு நிருபர் -