ADDED : ஜூன் 25, 2024 05:14 AM

புதுடில்லி: போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில், அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சட்டத்துக்கான விதிகள் நேற்று வெளியிடப்பட்டன. இதன்படி, உரிய நடைமுறைகளை உருவாக்க, என்.ஆர்.ஏ., எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பணிகள் உள்ளிட்டவற்றுக்கு, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., எனப்படும் பணியாளர் தேர்வு கமிஷன், ரயில்வே, வங்கி பணியாளர் தேர்வு வாரியம், என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை போன்ற அமைப்புகள் தகுதித் தேர்வுகளை நடத்துகின்றன.
இதில் வினாத்தாள் முன்னதாகவே கசிவது, ஆள்மாறாட்டம் உட்பட பல மோசடிகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், பொதுத் தேர்வுகள் நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு சட்டம், சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது. இதற்கான மசோதா ராஜ்யசபாவில், பிப்., 9லும், லோக்சபாவில், பிப்., 6லும் நிறைவேறியது. கடந்த, பிப்., 12ல், இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
சமீபத்தில் நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்துக்கான விதிகளை, மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி, என்.ஆர்.ஏ., எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமை, கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளுக்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டு முறைகளை உருவாக்கும். இதற்காக, அரசின் எந்தத் துறையுடனும் இணைந்து செயல்பட, அந்த முகமைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.