sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பீஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம வாக்காளர்கள் பெயர்களை 'வெளியிடுங்கள்!': உச்ச நீதிமன்றம் உத்தரவு

/

பீஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம வாக்காளர்கள் பெயர்களை 'வெளியிடுங்கள்!': உச்ச நீதிமன்றம் உத்தரவு

பீஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம வாக்காளர்கள் பெயர்களை 'வெளியிடுங்கள்!': உச்ச நீதிமன்றம் உத்தரவு

பீஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம வாக்காளர்கள் பெயர்களை 'வெளியிடுங்கள்!': உச்ச நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஆக 15, 2025 12:59 AM

Google News

ADDED : ஆக 15, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை, அதற்கான காரணத்துடன் இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்களுடன் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்ட சபை தேர்தல் நடப்பதையொட்டி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

குற்றச்சாட்டு தேர்தலுக்கு ஆறு மாதம் இருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியலை திருத்தக் கூடாது என்ற விதியை தேர்தல் கமிஷன் மீறிவிட்டதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. மேலும், வாக்காளர் பட்டியல் சேர்ப்புக்கு ஆதார், ரேஷன் கார்டுகளை ஏற்க தேர்தல் கமிஷன் மறுப்பதாகவும் முறையிடப்பட்டது.

இந்தச் சூழலில் கடந்த 1ம் தேதி, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதில், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர், இரு வேறு இடங்களில் பதிவு செய்தோர் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.

தேர்தல் கமிஷனின் இந்நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையிடப்பட்டது. உயிருடன் இருப்பவர்களின் பெயர்களையும் தேர்தல் கமிஷன் நீக்கி இருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அத்துடன் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'நீக்கப்பட்டவர்களின் விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட உத்தரவிட வேண்டும்' என கோரப்பட்டது.

இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், 'வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு எந்த விதியும் இல்லை. மேலும், இது வரைவு வாக்காளர் பட்டியல் தான், இறுதி வாக்காளர் பட்டியல் வரும் செப்., 30ம் தேதி வெளியிடப்படும்' என விளக்கம் அளித்தது.

முறைகேடுகள் இதற்கிடையே, ஆதார், ரேஷன் கார்டுகளில் முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால், அவற்றை நம்பகமான ஆவணமாக ஏற்க முடியாது என்ற தேர்தல் கமிஷனின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் ஏற்றது.

மேலும், சரிபார்ப்பு பணிக்காக பரிந்துரைத்த ஆவணங்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்த்தப்பட்டிருப்பதும் ஏற்புடையதே என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பக்சி அமர்வு முன், இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்றும் தொடர்ந்தது. அப்போது, எதிர்க்கட்சிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, நிஜாமுதீன் பாஷா ஆகியோர் ஆஜராகி வாதிட்டதாவது:

தேர்தல் கமிஷனின் நடவடிக்கை தன்னிச்சையானது. வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரை நீக்குகின்றனர் என்றால், அதற்கான காரணத்தை தேர்தல் கமிஷன் நிச்சயம் தெரியப்படுத்த வேண்டும். அடையாள சரிபார்ப்புக்காக தேர்தல் கமிஷன் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கலாம் என கூறுகிறது.

ஆனால், பீஹாரில் அதை வைத்திருப்போர் எண்ணிக்கை மிக மிக குறைவு. அதே போல், பட்டியல் இனத்தவர்களில் 0.37 சதவீதம் பேர் மட்டுமே கணினியை பயன்படுத்துகின்றனர்.

எனவே, அடிப்படை கட்டமைப்பு வசதிகளில்

தொடர்ச்சி 8ம் பக்கம்

'வெளியிடுங்கள்!'

5ம் பக்கத் தொடர்ச்சி

சிக்கல்கள் இருக்கும் சூழலில், இணையதளம் வாயிலாக சரிபார்ப்பு பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொள்வதை எவ்வாறு ஏற்பது?

இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

தொடர்ந்து, தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வாதிடுகையில், ''வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தமாக நீக்கப்பட்டவர்கள் 65 லட்சம் பேர். அதில், 22 லட்சம் பேர் உயிரிழந்தோர்,'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'உயிருடன் இருப்பவர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு இருப்பதாக ஆதாரத்துடன் எதிர்தரப்பினர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் நிறைய சந்தேகங்கள் எழுகின்றன' என்றனர்.

இதை தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விபரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும்.

நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர், உயிரிழந்தோர், இரு வேறு இடங்களில் பதிவு செய்தவர்கள் என அனைவரது பெயர்களையும் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், பஞ்சாயத்து அளவிலான அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலகங்களில் பார்வைக்காக வைக்க வேண்டும்.

நாளிதழ்கள், 'டிவி'க்கள் மற்றும் ரேடியோக்களிலும் இது தொடர்பாக விரிவான விளம்பரங்கள் வெளியிட வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டோர், மீண்டும் அதில் சேர ஆதார் அடையாள அட்டையுடன் முறையிடுவதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி தர வேண்டும். மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விபரங்களை இணையதளத்திலும் வெளியிட வேண்டும்.

இதை, நான்கு நாட்களுக்குள் தேர்தல் கமிஷன் செய்து முடிக்க வேண்டும். மாவட்டம் வாரியாக எந்ததெந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்; அதற்கான காரணம் என்ன? என அனைத்து விபரங்களும் அதில் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமூக ஊடக கணக்குகள் இருந்தால், அதிலும் இந்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

- டில்லி சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us