புதுச்சேரி ஹோட்டல் அறை முன் பதிவு போலி இணையதளங்களால் மோசடி
புதுச்சேரி ஹோட்டல் அறை முன் பதிவு போலி இணையதளங்களால் மோசடி
ADDED : டிச 29, 2024 12:35 AM
புதுச்சேரி:புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஹோட்டல், பொழுதுபோக்கு இடங்களில் கலை, நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணியர் புதுச்சேரிக்கு படையெடுக்க துவங்கி விட்டனர்.
புத்தாண்டிற்கு இரு நாட்கள் உள்ள நிலையில், தற்போதே புதுச்சேரியில் சுற்றுலா பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் முக்கிய ஹோட்டல் அறைகள், தங்கும் விடுதிகள் நிரம்பி வருவதால், சுற்றுலா பயணியர் ஆன்லைனில் அறை முன்பதிவு செய்து வருகின்றனர்.
இதை பயன்படுத்தி, புதுச்சேரியில் உள்ள முக்கியமான ஹோட்டல்கள் பெயரில் போலியான இணையதளத்தை உருவாக்கி, சைபர் கிரைம் கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
புத்தாண்டை முன்னிட்டு ஹோட்டல்கள் அறை கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. போலி இணையதளத்தில் குறைந்த கட்டணம் காண்பித்ததால், பலரும் முன்பதிவு செய்து, அதற்கான கட்டணம் செலுத்தியுள்ளனர்.
கட்டணம் செலுத்திய நபர்கள், சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு போன் செய்து, முகவரியை விசாரித்த போது, போலி இணையதளத்தில் பணம் செலுத்தி ஏமாந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சில ஹோட்டல் நிர்வாகத்தினர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில், 20க்கும் மேற்பட்ட வடமாநில சுற்றுலா பயணியர், போலி இணையதளங்களில் 5 லட்சம் ரூபாய் வரை ஹோட்டல் அறை பதிவு செய்ய முன்பணம் செலுத்தி ஏமாந்துள்ளது தெரியவந்தது.
சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் ஆன்லைனில் அறைகள் முன்பதிவு செய்யும் முன், ஹோட்டல் இணையதளத்தின் உண்மை தன்மையை அறிந்து பணம் செலுத்த வேண்டும். போலியான இணையதளத்தை உடனடியாக நீக்க மத்திய அரசு வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

