ADDED : அக் 25, 2024 11:01 PM

பெங்களூரு,; இரும்புத்தாது கடத்தல் வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் சைலுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
சட்டவிரோதமாக கடத்த முயற்சித்த, 11,312 டன் இரும்புத்தாதுவை பறிமுதல் செய்த போலீஸ் அதிகாரிகள், உத்தரகன்னடா, கார்வாரின் பெலகேரி துறைமுகத்தில் சேகரித்து வைத்திருந்தனர். இதை அனுமதி இல்லாமல், மல்லிகார்ஜுன் ஷிப்பிங் கார்ப்பரேஷன் உரிமையாளராக இருந்த சதீஷ் சைல், சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கடத்தினார்.
இதுதொடர்பாக, லோக் ஆயுக்தாவின் அன்றைய நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, விசாரணை நடத்தி விரிவான அறிக்கை அளித்திருந்தார். இது பற்றி சி.பி.ஐ.,யில் ஆறு வழக்குகள் பதிவாகின. சதீஷ் சைல், துறைமுக அதிகாரி மகேஷ் பிளியா, ஸ்ரீலட்சுமி வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ் உரிமையாளர் காரப்பொடி மகேஷ் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது ஜாமினில் வெளியே உள்ளனர்.
வழக்கு விசாரணையை முடித்த சி.பி.ஐ., மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்து, சாட்சி, ஆதாரங்களை அலசி ஆராய்ந்த நீதிமன்றம், ஏழு பேரையும் குற்றவாளிகள் என, நேற்று முன்தினம் அறிவித்தது.
தண்டனையை நேற்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. குற்றவாளிகளை கைது செய்யும்படி உத்தரவிட்டதால், எம்.எல்.ஏ., சதீஷ் சைல் உட்பட, ஏழு பேரையும் சி.பி.ஐ., கைது செய்திருந்தது.
நேற்று விசாரணை நடந்தபோது, சி.பி.ஐ., தரப்பு வக்கீல் ஹேமா, ''குற்றவாளிகள் 3,100 டன் இரும்புத்தாதுவை கடத்தியுள்ளனர். இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையுடன், அபராதமும் விதிக்க வேண்டும்,'' என்றார்.
சதீஷ் சைல் தரப்பு வக்கீல் மூர்த்தி நாயக், ''சதீஷ் சைலுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளார்.
இதனால் ஜாமின் பெற்றிருந்தார். திருட்டு, ஊழல் சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளுக்கு, அதிகபட்ச தண்டனை மூன்று ஆண்டுகளாகும். எனவே அதற்கும் குறைவான தண்டனை விதிக்க வேண்டும்,'' என வேண்டுகோள் விடுத்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'தண்டனை நாளை (இன்று) அறிவிக்கப்படும்' என கூறினார். சதீஷ் சைலுக்கு தண்டனை கிடைத்தால், அவர் எம்.எல்.ஏ., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.