ADDED : ஜன 21, 2025 07:16 PM
புதுடில்லி:'கோல்கட்டா ஜூனியர் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கிடைக்க வேண்டும்' என, அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரோஹன் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கோல்கட்டாவின் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், ஜூனியர் டாக்டராக பணியாற்றி வந்த, 31 வயது பெண், கடந்தாண்டு ஆக., 9ல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
பணியிடத்தில் டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்து, நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், போராட்டத்தில் குதித்தனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, டில்லியில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த டாக்டர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களும், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பல நாட்களாக போராட்டம் நீடித்தது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு நேற்று முன்தினம் சாகும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து சம்பவம் நடந்து ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கியதற்காக அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ரோஹன் கிருஷ்ணன், நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இறுதித் தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இருப்பினும், பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தங்கள் கடமையில் இருந்து தவறிய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இது எங்கள் அதிகபட்ச கோரிக்கை.
காலப்போக்கில், வழக்கில் பதிலளிக்கப்படாத அனைத்து கேள்விகளுக்கும் தீர்வு காணப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரிதிலும் அரிதான இந்த வழக்கில் ஒரே ஒரு நபர் மட்டுமே ஈடுபட்டிருப்பது நடைமுறையில் நம்பமுடியாதது. இது மற்ற குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புகளின் தோல்வியை பிரதிபலிக்கிறது. எனவே, அவரது ஆன்மா, அவரது குடும்பம் மற்றும் தேசத்திற்கு நீதி முழுமையடையவில்லை. குற்றவாளியான நபர் மேலும் விசாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வேறு யாரையாவது அம்பலப்படுத்த வேண்டும்.
துருவ் சவுகான்,
தேசிய கவுன்சில் உறுப்பினர்,
இந்திய மருத்துவ சங்கம்