ADDED : மே 02, 2025 01:28 AM
புதுடில்லி:'டில்லியில் தண்ணீர் தட்டுப்பாட்டை உருவாக்க பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு விரும்புகிறது. அவர்கள் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகின்றனர்' என, மாநில நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நதி நீர் பங்கீடு தொடர்பாக ஹரியானா பா.ஜ., மற்றும் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுகள் இடையே நடந்து வரும் வார்த்தைப் போரில் டில்லியில் உள்ள பா.ஜ., அரசு இணைந்துள்ளது.
'தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தின் வாயிலாக பஞ்சாப் அரசுக்கு ஹரியானா பா.ஜ., அரசு மறைமுக அழுத்தம் கொடுக்கிறது. மார்ச் மாதத்திற்குரிய பங்கை ஏற்கனவே பஞ்சாப் திறந்துவிட்டுள்ளது' என, முதல்வர் பகவந்த் மான் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய 'எக்ஸ்' பக்கத்தில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா வெளியிட்ட பதிவு:
ஹரியானா மற்றும் டில்லிக்கு யமுனா நீரை நிறுத்துவதன் மூலம் பஞ்சாப் ஆம் ஆத்மி பஞ்சாப் அரசு, கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டுள்ளது.
டில்லியில் தோல்வியடைந்த பிறகு, இப்போது தேசிய தலைநகரில் தண்ணீர் நெருக்கடியை உருவாக்க விரும்புகின்றனர்.
டில்லியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான தண்ணீரை வழங்க நாங்கள் இரவும் பகலும் உழைத்து வருகிறோம். ஆனால், பஞ்சாப் அரசு, டில்லி மக்களை பழிவாங்க விரும்புகிறது. இந்த மோசமான அரசியலை நிறுத்துங்கள். இல்லையெனில் நீங்கள் பஞ்சாபிலிருந்தும் வெளியேற்றப்படுவீர்கள்.
இவ்வாறு பதிவில் அவர் கூறியுள்ளார்.

