துப்பாக்கிச்சூடு நடத்தி பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., தப்பி ஓட்டம்
துப்பாக்கிச்சூடு நடத்தி பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., தப்பி ஓட்டம்
UPDATED : செப் 02, 2025 11:59 PM
ADDED : செப் 02, 2025 11:24 PM

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில், பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட, ஆளும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, 50, போலீசாரை துப்பாக்கியால் சுட்டு காவலில் இருந்து தப்பியோடியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாபில் முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சனுார் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா.
ஆளும் ஆம் ஆத்மியைச் சேர்ந்த இவர் மீது, ஜிராக்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.
அதன் விபரம்:
முதல் மனைவியை, 2013ல் விவாகரத்து செய்ததாக ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா என்னிடம் தெரிவித்தார். இதை நம்பி, அவரை காதலித்தேன். லுாதியானாவில் உள்ள குருத்வாராவில், 2021ல் எங்களுக்கு திருமணம் நடந்தது.
ஆனால், 2022 பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த போது, அதில், முதல் மனைவியின் பெயரை அவர் குறிப்பிட்டிருந்தார். அப்போது தான் எனக்கு உண்மை தெரிந்தது. முதல் திருமணத்தை மறைத்து, என்னை அவர் ஏமாற்றி விட்டார்.
மேலும், என்னை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டினார். மொபைல் போனில் ஆபாச வீடியோக்களையும் அனுப்பினார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனால் கடுப்பான அவர், தன் சொந்த கட்சியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.
'டில்லியில் உள்ள ஆம் ஆத்மி நிர்வாகிகள், பஞ்சாபை சட்ட விரோதமாக ஆட்சி செய்கின்றனர். அவர்கள் என்ன சொல்கின்றனரோ அதை அப்படியே முதல்வர் பகவந்த் சிங் மான் கேட்கிறார். பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு நீர்வளத் துறை முதன்மை செயலர் கிருஷ்ண குமார் தான் காரணம்.
'மக்கள் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. என் மீது பொய் வழக்கு பதியப்பட்டு உள்ளது. என்னை சிறையில் அடைக்கலாம். ஆனால், என் குரலை நசுக்க முடியாது. மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்' என, ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா குற்றஞ்சாட்டினார். இது, பஞ்சாப் அரசியலில் புயலைக் கிளப்பியது.
இந்நிலையில், பாலியல் பலாத்கார வழக்கில் எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ராவை, ஹரியானாவின் கர்னால் மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து, பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர்.
உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற போது, ஹர்மீத் சிங் பதன்மஜ்ராவும், அவரது கூட்டாளிகளும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு, இரு சொகுசு கார்களில் தப்பி ஓடினர். இதில், போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.
எனினும், ஒரு காரை போலீசார் மடக்கி பிடித்தனர். ஆனால் அந்த காரில் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா இல்லை. அதிலிருந்த அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ராவை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.