பஞ்சாப் பா.ஜ., பிரமுகர் வீட்டில் கையெறி குண்டு வீசி தாக்குதல்
பஞ்சாப் பா.ஜ., பிரமுகர் வீட்டில் கையெறி குண்டு வீசி தாக்குதல்
ADDED : ஏப் 09, 2025 02:54 AM

சண்டிகர் :பஞ்சாப் மாநில பா.ஜ., முன்னாள் தலைவர் மனோரஞ்சன் காலியாவின் வீட்டில், நேற்று அதிகாலை கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், யாருக்கும் காயமில்லை என்றாலும், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரின் கார், பைக் சேதமடைந்தன.
பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் முதல்வராக உள்ளார். கடந்த சில மாதங்களாக, அமிர்தசரஸ் மற்றும் குருதாஸ்பூர் போன்ற இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மர்ம நபர்கள்
இந்நிலையில், அமிர்தசரசில் இருந்து 100 கி.மீ.,யில் உள்ள ஜலந்தர் நகரில் இருக்கும், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், கட்சியின் முன்னாள் மாநில தலைவருமான மனோரஞ்சன் காலியா வீட்டில், மர்ம நபர்கள் நேற்று அதிகாலை கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இ - ரிக் ஷாவில் வந்த மர்ம நபர்கள், மனோரஞ்சன் காலியா வீடு மீது தாக்குதல் நடத்திய நேரத்தில், அவர் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.
முதலில், 'ஓவர் லோடு' காரணமாக மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்திருக்கக் கூடும் என நினைத்த அவரிடம், வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என பாதுகாவலர் கூறியுள்ளார்.
உடனே, 100 மீட்டர் துாரத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தார். எனினும், யாரும் அழைப்பை எடுக்காததால், தன் பாதுகாவலரை போலீஸ் நிலையம் அனுப்பி, புகாரை பதிவு செய்தார்.
பதவி விலக வேண்டும்
அதில், 'அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், என் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வீட்டின் சமையல் அறை ஜன்னல்கள், வாசல் அருகே சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
'வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த கார் மற்றும் பைக் சேதம் அடைந்துள்ளன' என கூறியுள்ளார்.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுள்ளது என கூறியுள்ள காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தாக்குதலுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பகவந்த் மான் பதவி விலக வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'இந்த தாக்குதல் தொடர்பாக, பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பலைச் சேர்ந்த ஷாகிர் அக்தார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
'இந்த தாக்குதலில், பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யின் சதி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.