பஞ்சாப் முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
பஞ்சாப் முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
ADDED : செப் 06, 2025 07:15 AM

சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மியைச் சேர்ந்த பகவந்த் மான் உள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கும் மேலாக அஜீரணக்கோளாறும், வைரஸ் காய்ச்சலும் இருந்து வந்துள்ளது. வீட்டிலேயே அதற்கான சிகிச்சையை அவர் மேற்கொண்டதாக தெரிகிறது.
இருப்பினும், உடல்நலக் கோளாறு சரியானதாக தெரியவில்லை. பகவந்த் மான், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்த அர்விந்த் கெஜ்ரிவால் நேரிலேயே சென்று அவரை சந்தித்து உடல்நலம் பற்றி கேட்டறிந்தார்.
இந் நிலையில், உடல்நலம் குணம் அடையாததால் அவர் உடனடியாக மொஹாலியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
பகவந்த் மான் மருத்துவமனையில் உள்ளதால், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க அர்விந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் செல்ல உள்ளார். கபுர்தலா மாவட்டத்தின் சுல்தான்பூர், லோதி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்ல இருக்கிறார். முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டம் மறு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.