விவசாய சங்க தலைவருடன் பஞ்சாப் டி.ஜி.பி., சந்திப்பு
விவசாய சங்க தலைவருடன் பஞ்சாப் டி.ஜி.பி., சந்திப்பு
ADDED : டிச 15, 2024 11:55 PM

சண்டிகர்: வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 13 முதல், ஹரியானா - பஞ்சாப் மாநில எல்லைகளான ஷம்பு, கானவுரியில், 'டில்லி சலோ' அதாவது, 'டில்லிக்கு செல்வோம்' என்ற போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.
ஷம்பு எல்லையில் இருந்து டில்லிக்கு செல்ல முயன்ற விவசாயிகளை மூன்று முறை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், நவ., 26ல், கானவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.
இந்த போராட்டம், 20 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நடக்கிறது. புற்றுநோயாளியான ஜக்ஜித் சிங் தலேவால், உண்ணாவிரதத்தால், 11 கிலோ எடை குறைந்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜக்ஜித் சிங் தலேவாலை சந்தித்து பேச்சு நடத்தும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், கானவுரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஜக்ஜித் சிங் தலேவாலை, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி மயாங்க் மிஸ்ரா ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர்.