பாக்., ஆதரவு பயங்கரவாத கும்பல் கைது: பஞ்சாப் போலீசார் அதிரடி
பாக்., ஆதரவு பயங்கரவாத கும்பல் கைது: பஞ்சாப் போலீசார் அதிரடி
ADDED : ஏப் 19, 2025 10:10 PM

சண்டிகர்: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஆதரவுடன் செயல்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 13 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக டிஜிபி கவுரவ் யாதவ் கூறியதாவது: கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தடை செய்யப்பட்ட பாபர் கால்சா சர்வதேச அமைப்பைச் சேர்ந்தவர்கள். ஒருவன், பிரான்சை சேர்ந்த சத்னம் சிங் மற்றொருவன் கிரீசை சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் ஆகியோர் கைதாகி உள்ளனர். பஞ்சாபில் நிலவும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சித்தவர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட கும்பலிடம் இருந்து கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், 5 கிலோ எடை கொண்ட டெட்டனேட்டர்கள், 2 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகள், பிஸ்டல், துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், ஆயுத சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.