கதையல்ல, ஒரு காத்திருப்பு! 23 ஆண்டுகள் லெபனானில் சிக்கி கண்ணீர் சிந்திய இந்தியர்!
கதையல்ல, ஒரு காத்திருப்பு! 23 ஆண்டுகள் லெபனானில் சிக்கி கண்ணீர் சிந்திய இந்தியர்!
ADDED : செப் 21, 2024 07:59 AM

ஜலந்தர்: 23 ஆண்டுகள் லெபனானில் சிக்கி தவித்த இந்தியர், மீட்கப்பட்டு பத்திரமாக தாயகம் திரும்பி உள்ளார்.
பொருளாதார சூழல்
இதுபற்றிய விவரம் வருமாறு; பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள மத்தேவாரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் குர்தேஜ் சிங். லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் பொருளாதார ரீதியாக சிரமப்பட, வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளார்.
வயல் வேலை
டிராவல் ஏஜெண்ட்டை அணுகி ரூ.1 லட்சம் செலவு செய்து 2001ம் ஆண்டு ஜோர்டான், சிரியா வழியாக லெபனானுக்கு சட்ட விரோதமாக சென்றுள்ளார். அங்கு அவருக்கு வயல் வேலை. ஆண்டுகள் கடந்தன. வேலையும் அதே வேலைதான்.
போராட்டம்
எதிர்பாராத விதமாக 2006ம் ஆண்டில் தமது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டார் குர்தேஜ் சிங். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக அதை மீட்க எவ்வளவோ போராடி உள்ளார். லெபனானில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகி அதற்கான முயற்சிகளில் இறங்கினார். சட்ட விரோதமாக வந்தவர் என்பதால் அவரின் முயற்சிகளுக்கு பலன் கிட்டவில்லை.
தந்தை, சகோதரன் மறைவு
பாஸ்போர்ட் மீட்பு போராட்டம் ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் தமது சொந்த ஊரில் அவருக்காக காத்திருந்த தந்தை, சகோதரன் இறந்தனர். கடும் வேதனை சூழ்ந்து கொள்ள, மீண்டும் இந்திய தூதகரத்தின் கதவுகளை தட்ட ஆரம்பித்தார்.
கவனம்
இப்போது லெபனான் விவகாரம் உலக நாடுகளின் பார்வை நோக்கி திரும்ப, குர்தேஜ் சிங் குடும்பத்தினர் ராஜ்யசபா எம்.பி., பல்பீர் சிங் சீச்வால் என்பவரை தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கி உள்ளனர். அவரும் சூழலை புரிந்து கொண்டு வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
8 மாத விசாரணை
அதன் பின்னர் சண்டிகரில் உள்ள பாஸ்போர்ட் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.8 மாதங்கள் உரிய விசாரணைகள், ஆய்வுக்கு பின்னர், குர்தேஜ் சிங்குக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இப்படியாக அவரின் தாய்நாட்டுக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணம் நிறைவேற கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் கழித்து சொந்த ஊரில் கால்பதித்துள்ளார் குர்தேஜ் சிங்.
23 ஆண்டு துயரம்
இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது; வெளிநாடு செல்ல வேண்டும் என்று விரும்புவர்கள் சட்ட ரீதியான வழிகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். என்னை போன்று எதிர்பாராத சூழல்களை இதன் மூலம் நேராமல் பார்த்துக் கொள்ளலாம். குடும்பத்தை பிரிந்து, தந்தை, சகோதரனை இழந்து, இந்த 23 ஆண்டுகளில் நான் பட்ட துயரங்கள் ஏராளம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
சத்தியம்
வெளிநாட்டுக்கு சென்று பல ஆண்டுகால போராட்டம், தவிப்பு, மன உளைச்சல்களுடன் ஒரு வழியாக தாய் மண்ணில் காலடி வைத்த அவரை ஊர் மக்கள் கொண்டாடி மகிழ்ச்சியுடன் வரவேற்று இருக்கின்றனர். சட்ட விரோத அயல்நாடு வேலை என்பது சாத்தியம் என்றாலும் அது சத்தியமான தவறே என்பதை உணர்த்துகிறது குர்தேஜ் சிங்கின் கதை!